அமெரிக்காவைச் சேர்ந்த மின்சாரக் கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் உற்பத்திகள் உலகளாவிய மின்சார வாகன விற்பனையின் வீழ்ச்சி மற்றும் சீன உற்பத்தியாளர்களால் ஏற்படும் போட்டி ஆகியவற்றின் தாக்கத்தினால் மந்தகதியை அடைந்திருந்தன.
இதற்குத் தற்போது ஆசியப் பொருளாதாரம் மிகப்பெரும் வாய்ப்பொன்றை வழங்கியிருக்கிறது. பல வருட ஊகங்களுக்குப் பிறகு, டெஸ்லா கார்கள் இந்தியாவில் அறிமுகமாகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மின்சார வாகன நிறுவன வலையமைப்பானது இந்தியாவின் டெல்லி நகரில் தமக்கான காட்சியறைகளை அமைத்துவருவதாகவும், வேலைக்கு பணியாட்களை நியமித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்தியாவின் மின்சார வாகன சந்தையில் டாடா மோட்டார்ஸ் 60 வீததிற்கும் அதிகமான சந்தைப் பங்குகளைக் கொண்டுள்ளது.
இந்தியாவின் JSW மற்றும் சீன நிறுவனத்திற்கு சொந்தமான MG மோட்டார்ஸ் 22 வீதத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளன. இவற்றைத் தொடர்ந்து மஹிந்திரா நிறுவனம் காணப்படுகின்றது.
இந்த நிறுவனங்களால் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களின் விலை, டெஸ்லாவின் அடிப்படை மாதிரிக்கு மட்டும் நுகர்வோர் செலவிட வேண்டிய தொகையில் பாதிக்கும் குறைவானதாகும்.
மேலும் இந்தியாவின் சாலை நிலைமைகளும் டெஸ்லா கார்களுக்கு சவாலானதாக அமையுமெனக் கூறப்பட்டுள்ளது.
டெஸ்லா கார்களின் அடித்தளத்திற்கும் தரைக்கும் இடையிலான தூரம் குறைவானதாகும். இது இந்திய சாலைகளுக்கு கடினமாக இருக்கும். தற்போதுள்ள மாதிரிகளை இந்திய சாலைகளுக்கு ஏற்றவாறு மறுசீரமைக்க வேண்டியிருக்கும். இது உற்பத்தி செலவுகளை மேலும் அதிகரிக்கும்.
மேலும், அனைத்திற்கும் மத்தியில், இந்தியாவில் ஒட்டுமொத்த பயணிகள் வாகன விற்பனையில் மின்சார வாகன விற்பனை இன்னும் 3% க்கும் குறைவாகவே உள்ள நிலையில் இந்தியா முழுவதும் சுமார் 25,000 மின்னேற்றும் நிலையங்கள் மட்டுமே உள்ளன.
இப்படியான நிலையில் டெஸ்லா கார்கள் இந்தியாவில் அறிமுகமாவது தொடர்பாகவும், ட்ரம்பின் பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பாகவும் பரவலாக விவாதங்கள் இடம்பெற்றுவருகின்றன.
Link : https://namathulk.com