வெளிநாட்டிற்கு தப்பிக்க முயற்சித்த
முன்னாள் சிறைச்சாலை ஆணையாளர் : பயணத்திற்கு அனுமதி மறுத்த நீதிமன்றம்
முன்னாள் சிறைச்சாலை ஆணையாளர் கே.கே. சுமித்திற்கு எதிரான வழக்கில் , அவர் வெளிநாடு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தனது பதவிக் காலத்தில் 5 கோடி ரூபாவுக்கும் அதிகமான சொத்துக்களை எவ்வாறு சம்பாதித்தார் என்பதை வெளியிடத் தவறியதற்காக கே.கே. சுமித்திற்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவர் வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்குமாறு தனது சட்டத்தரணிகள் ஊடாக விடுத்த கோரிக்கையை நீதிபதி சுஜீவ நிஸ்ஸங்க நிராகரித்தார்.
முன்னாள் சிறைச்சாலை ஆணையாளர் தனது சட்டபூர்வமான வருமானத்திலிருந்து சம்பாதிக்க முடியாத சுமார் 5 கோடி ரூபா பணம் மற்றும் சொத்துக்களை சொந்தமாக வைத்திருப்பதன் மூலம் இலஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் கீழ் குற்றங்களைச் செய்ததாகக் கூறி, இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், மிக அவசர தேவை ஒன்றுக்காக தமது கட்சிக்காரர் 07 ஆம் திகதி வெளிநாடு செல்ல வேண்டியுள்ளதால் நீதிமன்றம் விதித்த பயணத் தடையை அன்றிலிருந்து ஒரு வாரத்துக்கு இடைநிறுத்தி வைக்க உத்தரவிடுமாறு பிரதிவாதி தரப்பு சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்தனர்.
இருப்பினும், சட்டமா அதிபரின் சார்பாக வழக்குத் தொடர்ந்த அரச சட்டத்தரணி பிரதிவாதியின் கோரிக்கையை கடுமையாக ஆட்சேபனைக்கு உட்படுத்தினார்.