பொதுப் போக்குவரத்தில் பெண்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 109 என்ற துரித இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்தி அறிவிக்குமாறு பிரதி பொலிஸ் மாஅதிபர் ரேணுகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பில் அறிவிக்க இந்த விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது இந்த துரித தொலைபேசி இலக்கம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பொதுப்போக்குவரத்தில் பயணிக்கும் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், இவ்வாறான சம்பவங்கள் குறித்து தொடர்ந்தும் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் பிரதி பொலிஸ் மா அதிபர் கூறினார்.
அத்துடன், இவற்றைத் தடுக்கும் வகையிலேயே துரித இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதி பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டார்.
இவ்வாறான வன்முறை சம்பவங்கள் இடம்பெறும்போது அவை தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டினார்.
அதன்மூலம், பெண்களுக்கான நீதியை பெற்றுத்தர முடியும் எனவும் பிரதி பொலிஸ் மா அதிபர் ரேணுகா ஜயசுந்தர கூறினார்.
Link : https://namathulk.com