யாழில் வளி மாசுபாடு : முன்னெடுக்கப்படவுள்ள விசேட திட்டம்.

Aarani Editor
1 Min Read
வளி மாசுபாடு

யாழ்ப்பாணம் உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் வளி மாசுபாட்டைக் குறைப்பதற்கான ஒரு திட்டத்தை செயல்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் அதிகரித்து வரும் வளி மாசுபாட்டைக் குறைப்பதற்கான ஒரு திட்டத்தை வகுக்க சுற்றாடல் அமைச்சர் மற்றும் பிரதிவாதிகளுக்கு உத்தரவிடக் கோரி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வைத்தியர் உமா சுகி நடராஜாவினால் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவர் நீதிபதி முகமது லபார் தாஹிர் மற்றும் நீதிபதி சரத் திசாநாயக்க ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் காற்றின் தரம் குறித்து ஒரு மாத காலத்திற்கு ஆய்வை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் முன்னர் உத்தரவிட்டிருந்தது.

அந்த உத்தரவின்படி, முன்னெடுக்கப்பட்ட ஆய்வறிக்கை சட்டமா அதிபர் மூலம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த ஆய்வறிக்கையை ஆராய்ந்த போது, ​​யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள வளியில் நிலையான அளவை விட அதிகமான தீங்கு விளைவிக்கும் கூறுகள் இருப்பதாகத் தகவல் தெரியவந்துள்ளதாக மனுதாரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ரவீந்திரநாத் தாபரே நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்தார்.

யாழ்ப்பாணக் குடாநாடு உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் வளி மாசுபாட்டைக் குறைப்பதற்கான ஒரு திட்டத்தை செயல்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.

இதற்காக பெரும் செலவு செய்ய வேண்டியிருக்கும் என்றும், இந்தப் பணிகளை மேற்கொள்வதற்காக வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளிடமிருந்து நிதியைப் பெறத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அரசாங்கத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, இந்த நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து அறிக்கை வழங்குமாறு நீதிமன்றம் இரு தரப்பினருக்கும் உத்தரவிட்டது.

அதற்கமைய, குறித்த மனுவை ஜூலை 5 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் தீர்மானித்தது.

Link: https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *