கடந்த மாதம் 19ஆம் திகதி பாகிஸ்தானில் ஆரம்பித்த 2025ஆம் ஆண்டிற்கான சர்வதேச சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கட் போட்டியானது இறுதிக் கணத்தை எட்டியிருக்கிறது.
எட்டு நாடுகள் பங்கேற்ற இப் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நான்கு அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றிருந்தன.
பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து ஆகிய நாடுகள் வெளியேற்றப்பட்டன.
துபாயில் கடந்த 4ஆம் திகதி நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வெற்றிகொண்டது.
லாகூரில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து 50 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வெற்றிகொண்டது.
இதனைத் தொடர்ந்து எதிர்வரும் சர்வதேச சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கட் போட்டியின் இறுதிப் போட்டியானது எதிர்வரும் 09ஆம் திகதி துபாயிலுள்ள, துபாய் சர்வதேச துடுப்பாட்ட மைதானத்தில் இடம்பெற உள்ளது.
இதில் இந்திய அணியும் நியூசிலாந்து அணியும் ஒன்றை ஒன்று எதிர்த்து துடுப்பெடுத்தாட உள்ளன.
இவ்விரு அணிகளும் 25வருடங்களின் பின்னர் ஒன்றை ஒன்று எதிர்த்து களமிறங்க உள்ளன.
2000ஆம் ஆண்டு கென்யாவில் நடைபெற்ற 2வது ஐ.சி.சி. நாக் அவுட் டிராபி இறுதிப் போட்டியில் இவ்விரு அணிகளும் மோதியிருந்தன.
இதில் நியூசிலாந்து அணி வெற்றிக் கோப்பையைக் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 25 வருடங்களின் பின்னர் இரு அணிகளும் மோதப்போகும் சுவாரசியமிக்க ஆட்டத்தைக் காண ரசிகர்கள் தயாராகிவருகின்றனர்.
Link : https://namathulk.com