கடந்த பிப்ரவரி 14ஆம் திகதி ரோமின் ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 88 வயதான புனித பாப்பரசர் பிரான்சிஸின் குரல் பதிவை முதன்முறையாக வத்திக்கான் வெளியிட்டுள்ளது.
செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் ஒவ்வொரு நாளும் மாலை வேளைகளில் யாத்திரீகர்கள் ஒன்றுசேர்ந்து புனித பாப்பரசர் விரைவில் குணமடையவேண்டுமென பிரார்த்தனை செய்வது வழமை.
கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற பிரார்த்தனையின்போது புனித பாப்பரசரின் குரல் பதிவு முதன்முறையாக அனைவருக்கும் ஒலிபரப்பப்பட்டது.
“கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக, கன்னிகை உங்களைப் பாதுகாக்கட்டும். நன்றி” என்று அவர் தனது தாய்மொழியான ஸ்பானிஷ் மொழியில் பேசுவதாக அந்தக் குரல் பதிவு ஒலிபரப்பானது.
பேசும்போது புனித பாப்பரசர் மூச்சு விட சிரமப்பட்டதோடு, மேலும் சில வார்த்தைகள் சத்தமின்றி மறைந்து போனதுபோல் குரல் பதிவு அமைந்திருந்தது.
அங்கிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் அவரது குரலில் ஒலிபரப்பான செய்தியைக் கேட்டபோது கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
தவக்காலத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையைக் குறிக்கும் திருப்பலியில் புனித பாப்பரசருக்குப் பதிலாக மூத்த கார்டினல் மைக்கேல் செர்னி கலந்துகொள்வார் என்று வத்திக்கான் கடந்த வியாழக்கிழமையன்று உறுதிப்படுத்தியுள்ளது.
Link : https://namathulk.com