வடக்கு மாகாணத்திற்குள் வசிக்கும் புற்றுநோயாளர்கள் கொழும்பு உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு செல்வதால் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் தமது மாதாந்த சிகிச்சைகளை யாழ் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் தொடர்வதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் எனவும் சமூக ஊடகங்கள் வாயிலாக கோரிக்கைகைகள் வலுப்பெற்றுள்ளன.
உண்மையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் மாதாந்த சிகிச்சைகள் வழங்கப்படுவதில்லையா?
அல்லது, தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் போதுமான வசதிகள் இல்லையா ?
நோயாளர்கள் கொழும்பிற்கு செல்லவேண்டிய தேவை என்ன? போன்ற விடயங்கள் தொடர்பில் நமது ரி.வி செய்திப் பிரிவு இன்று ஆராய்ந்தது.
இந்த விடயங்கள் தொடர்பில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் சமன் பத்திரனவிடம் நாம் வினவினோம்.
யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மாகாணத்தில் எந்தவொரு பகுதியில் வசிப்பவராக இருந்தாலும் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் புற்றுநோய்க்கான சிகிச்சையை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் கூறினார்.
நோயாளர்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் தமது குழு ஆராய்ந்து பார்த்ததாக அவர் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள வைத்தியர் ஒருவரிடம் தனிப்பட்ட ரீதியில் சிலர் சிகிச்சைக்கு சென்று வருவதாகவும், இதனாலேயே இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதாகவும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கூறினார்.
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் போதுமான வசதிகளும், சிகிசைக்களும் காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.
Link : https://namathulk.com