இலங்கையில் கைது செய்யப்பட்ட 14 தமிழக மீனவர்கள், அவர்களது மீன்பிடி படகுகளையும் விடுவிக்க பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரிடம் கடிதம் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையில் கைது செய்யப்பட்ட 14 தமிழக மீனவர்கள் குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எழுதிய கடிதத்திலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
227 தமிழக மீன்பிடி படகுகளும் 107 மீனவர்களும் இலங்கை அதிகாரிகளின் காவலில் உள்ளதாக முதலமைச்சர் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டிள்ளார்.
இராமநாதபுரம், இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 14 மீனவர்கள் இலங்கையில் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களின் இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடி படகும் நேற்று முந்தினம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் முதலமைச்சர் கவலை தெரிவித்தார்.
2025 ஆம் ஆண்டின் கடைசி 2 மாதங்களில் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகள் கைது செய்யப்பட்ட ஒன்பதாவது சம்பவம் இது என்றும் முதலமைச்சர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கை அதிகாரிகள் மீனவர்களை நீண்ட காலத்திற்கு தடுத்து வைத்து, அவர்களை விடுவிப்பதற்காக கடுமையான அபராதங்களை விதிக்கத் தொடங்கியுள்ளதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.
அத்துடன், தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட காலத்தில் சிறைத்தண்டனை, அபராதம் மற்றும் வருமான இழப்பு போன்ற கஷ்டங்களுக்கு அப்பால், மீனவர்கள் இப்போது தங்கள் பொருளாதார வாழ்வாதாரத்தில் இன்னும் பெரிய இழப்பை எதிர்கொள்வதாகவும் முதலமைச்சர் வலியுறுத்தினார்.
ஏனெனில், இலங்கை அரசாங்கம் அவர்களின் பொருளாதார ஆதரவுக்கான ஒரே வழிமுறையான படகுகளை திருப்பித் தரவில்லை எனவும் முதலமைச்சர் கூறினார்.
Link : https://namathulk.com/