ஒட்டுமொத்த சமூக அமைப்பிலிருந்து பெண்கள் தவிர்க்க முடியாத முக்கிய பங்காளர்களாக இருப்பதோடு, அந்த சமூக அமைப்பின் படைப்பாற்றல் கலைஞர்களும் பெண்கள் தான் என சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தெரிவித்தார்.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சபாநாயகர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
நமது நாட்டின் தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்கள் நாட்டின் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சாரத் துறைகளுக்கு பெரும் பங்களிப்பை வழங்கியிருந்தாலும், ஒரு சமூகமாக நாம் இன்னும் அவர்களுக்குத் தகுதியான சமூகப் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் சுதந்திரத்தை அளிப்பதில் இன்னும் தோல்வியடைந்து கொண்டிருக்கிறோம் என சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.
இந்த விடயத்தில் பாராளுமன்றத்திற்கு மிகப்பெரிய பொறுப்பு இருப்பதாகவும் சபாநாயகர் வலியுறுத்தினார்.
2025 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடும் இந்த வேளையில், நமது அன்புக்குரிய சகோதரிகளின் கண்ணியத்தைப் பாதுகாப்பதும், அரசியல், பொருளாதார, சமூக மற்றும் கலாச்சாரத் துறைகளில் பாலின வேறுபாடுகள் மற்றும் சமூக வேறுபாடுகளிலிருந்து விரைவாக விடுதலை பெறுவதும் சவாலாக காணப்படுவதாகவும் சபாநாயகர் கூறினார்.
அதன்படி இலங்கைப் பெண்களின் அரசியல் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தைக் குறிக்கும் அதிகூடிய பெண் பிரதிநிதித்துவத்தைக் கொண்ட தற்போதைய பத்தாவது பாராளுமன்றத்தின் மூலம் நமது அன்பான தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்களுக்கு மிகவும் கண்ணியமான, பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான புதிய அணுகுமுறையில் பங்களிக்கும் ஆற்றல் அரசாங்கத்திடம் உள்ளதாகவும் சபாநாயகர் தெரிவித்தார்.
Link : https://namathulk.com