இலங்கை இந்திய மீனவர் பிரச்சினை என்பது இன்றளவும் தீர்வு காண முடியாத பிரச்சினையாக உள்ளது.
தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி இந்தியாவில் பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுப்பட்டு வர, மறுப்புறம் இலங்கை மீனவர்கள் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்துமாறும், பொருளாதாரம் பாதிக்கப்படுவதாகவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அத்துடன், இந்திய முதலமைச்சர் மு.கா ஸ்டாலினும், இலங்கையில் கைது செய்யப்பட்ட 14 தமிழக மீனவர்கள், அவர்களது மீன்பிடி படகுகளையும் விடுவிக்க பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்குமாறு இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரிடம் கடிதம் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில், இலங்கை கடல் எல்லைக்குள் பல்வேறு சந்தர்ப்பங்களில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 17 பேருக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனையும் , தலா இரண்டரை லட்சம் ரூபா தண்டப் பணமும் விதித்து மன்னார் நீதவான் விடுதலை செய்துள்ளார்.
அத்துடன், கைது செய்யப்பட்ட மீனவர்களில் ஒருவர் அனுமதி பத்திரம் இன்றி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடியில் இரண்டாவது தடவையாக ஈடுபட்டமை கண்டறியப்பட்ட நிலையில் குறித்த நபருக்கு 24 மாத சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 23ஆம் திகதி தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 32 மீனவர்களில், 17 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டதுடன் ஏனைய மீனவர்களை எதிர்வரும் 14ம் திகதி வரை விளக்கமறியல் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.
கடந்த 2ஆம் திகதி கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களில் 9 பேர் விடுதலை செய்யப்பட்டதுடன் , ஒருவருக்கு 2 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, கடந்த 20ஆம் திகதி கைது செய்யப்பட்ட 04 மீனவர்களும் மன்னார் நீதவானால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், நேற்று முன் தினம் மன்னார் தாழ்வுபாடு பகுதியில் கைது செய்யப்பட்ட 14 மீனவர்களையும் எதிர்வரும் 14 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் மன்னார் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
Link : https://namathulk.com