புதிய மறுமலர்ச்சியை நோக்கிய பயணத்தில் பெண்களின் ஆதரவு அவசியம் – ஜனாதிபதி

Rajan
By
2 Min Read
ஜனாதிபதி

சர்வதேச மகளிர் தினம் என்பது பெண்களின் உரிமைகளுக்கான செயற்பாட்டிற்குக் கிடைத்த வெற்றியாகும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்றைய மகளிர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியிலேயே இதனை கூறியுள்ளார்.

கடந்த காலங்களில் மகளிர் தினத்தைக் கொண்டாடுவதற்காக நாட்டில் பல கலந்துரையாடல்களும் கருத்தாடல்களும் நடத்தப்பட்டிருந்தாலும், மேடைக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட அந்த கலந்துரையாடல்கள், பூமியில் ஒரு யதார்த்தமாக விதைக்கப்படவில்லை என ஜனாதிபதி கூறியுள்ளார்.

அதேவேளை, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை கட்டியெழுப்புவதில் இலங்கை பெண்களின் பங்களிப்பு மகத்தானது எனவம் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த மகத்தான பணிக்காக ஒரு அரசாங்கமென்ற வகையில் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளும் அதேவேளை, கடந்த குறுகிய காலத்தில் இலங்கைப் பெண்களுக்கு பல வெற்றிகளை அடைய தேவையான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், பல தசாப்தங்களாக கலந்துரையாடலுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம், பங்கேற்பு மற்றும் வகிபாகத்தை அதிகரித்து, கடந்த பொதுத் தேர்தலில் இருபத்தி இரண்டு பெண்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது இந்நாட்டின் அரசியலில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்பதில் சந்தேகமில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அதேபோல், ஆண்- பெண் சமூக சமத்துவத்திற்கான சமூக நீதியை அடைவதற்கான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கையான உற்பத்திப் பொருளாதார செயல்பாட்டில், இந்நாட்டின் சனத்தொகையில் 51.7% ஆக இருக்கும் பெண்களை தீவிரமாகவும் செயற்திறனுடனும் ஈடுபடுத்தும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளர்.

இதற்கமைய, ‘ சகல பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளுக்கும் சமத்துவம், உரிமைகள் மற்றும் வலுவூட்டல் எனும் தொனிப்பொருளின் கீழ் ‘ நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக அவள் வலுவான வழிகாட்டியாக இருப்பாள் ‘ என இந்த ஆண்டு மகளிர் தினத்தை ஏற்பாடு செய்வதிலுள்ள அர்த்தம் மற்றும் நடைமுறைச்சாத்தியம் என்பனவற்றை நினைவூட்ட வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

பொருளாதார சுபீட்சத்தை அடைவதற்கும், நாட்டின் பெண்களுக்கு பாதுகாப்பான வாழ்வு மற்றும் நாகரிகமான சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கும், ஒரு புதிய மறுமலர்ச்சியை நோக்கிய நமது பயணத்தில் முழுமையான பெண்கள் தலைமுறையினரின் ஆதரவை எதிர்பார்த்து சர்வதேச மகளிர் தினத்திற்கு தனது மனார்ந்த வாழ்த்துகளை ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *