யாழ்ப்பாணம் செம்மணி சிந்துப்பாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியை அகழ்வதற்கான நிதி மதிப்பீட்டு அறிக்கை யாழ்ப்பாண நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அகழ்வுப் பணிகளுக்காக சுமார் இரண்டு மில்லியன் ரூபா தேவைப்படும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட செம்மணி சிந்துபாத்தி மயானத்தில் தகன மேடை அமைப்பதற்காக தோண்டப்பட்ட குழியில் மனித எச்சங்கள் காணப்பட்டமை தொடர்பில், நீதிமன்ற உத்தரவிற்கமைய யாழ் போதன வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்தார்.
ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட மாதிரிகள் மனித எச்சங்கள் எனவும், சிறுவர்களின் பாற்பற்கள் இருப்பதும் சட்ட வைத்திய அதிகாரியினால் மன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் குறித்த விடயம் தொடர்பில் ஆராயப்பட்டபோது, வழக்காளிகள் சார்பில் சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஷ், காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் சார்பில் சட்டத்தரணி தற்பரன், யாழ் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் மற்றும் நல்லூர் பிரதேச சபை அதிகாரிகள் பிரசன்னமகி இருந்தனர்.
அத்தோடு, அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்கு தேவையான நிதி தொடர்பான அறிக்கையை காணாமல் ஆக்கப்பட்ட அலுவலகம் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி பிரணவன் இணைந்து நிதி அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அதனை மேல் நீதிமன்றம் ஊடாக நீதி அமைச்சுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் குறித்த அகழ்வுக்கான நிதி மதிப்பிட்ட அறிக்கை நீதிமன்றத்திற்கு நேற்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
Link: https://namathulk.com