கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் Al Jazeera சர்வதேச ஊடக நேர்காணலில் கலந்துக் கொண்ட இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்த பல கருத்துக்கள் உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் பாரிய எதிரொலியை தோற்றுவித்துள்ளது.
அதில் பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை முற்று முழுதாக நிராகரித்த ரணில் விக்ரமசிங்க, நேர்காணலில் ஈடுபட்ட ஊடகவியலாளரிடம் மெத்தன போக்காக பதில் வழங்கினார்.
இலங்கையில் நடைபெற்ற உள்ளாட்டு யுத்தம், யுத்த குற்றங்கள், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், இலங்கை மத்தியவங்கி மோசடி, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் போன்ற பல விடயங்கள் தொடர்பில் ரணில் மீது சரமாரியாக கேள்விக் கணைகள் தொடுக்கப்பட்டன.
இந்த விடயங்களுக்கு ரணில் விக்கரமசிங்க வழங்கிய பதில்கள் தற்போது அவருக்கே பல எதிர்வினைகளை தோற்றுவித்துள்ளது.
அந்தவகையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அரசாங்கம் புதிய விசாரணையைத் தொடங்கும் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.
ஊடகவியலாளர்களை சந்தித்த வட்டகல, படலந்த அறிக்கை தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என கூறினார்.
அத்துடன் மத்திய வங்கி முறிகள் மோசடி மற்றும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்தும் விசாரணைகள் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.