எதிர்வரும் ஒரு தசாப்தத்தில், பண்பாடான மனித நேயமிக்க தேசமாக , இந்தநாட்டை மாற்றியமைக்கும் பணியில் பெண்கள் தலைமை வகிப்பார்கள் என்பது தனது நம்பிக்கை என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
சர்வதேச மகளிர் தினத்துடன் இணைந்ததாக ‘மறுமலர்ச்சியில் பெண்களின் சக்தியைக் கட்டியெழுப்புவோம்’ என்ற கருப்பொருளின் கீழ் கடவத்தையில், கம்பஹா மாவட்ட மகளிர் தின நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது, பெண்களாக உரிமைகளுக்காக போராடிய போது, இந்த இடத்திலிருக்கும் பல பெண்கள் அன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலிலிருந்து தன்னை பாதுகாத்ததாக பிரதமர் கூறினார்.
அத்துடன், போராட்டங்களில் குரல் எழுப்பிய சாவித்ரி போல்ராஜ், மகளிர் விவகார அமைச்சராக உள்ளதாகவும் பிரதமர் வலியுறுத்தினார்.
உள்ளூராட்சி தேர்தலில், பெண் பிரதிநிதிகளுக்கு விசேட பொறுப்பு காணப்படுவதாகவும், 25 % பெண் பிரதிநிதித்துவத்தை அடைய வேண்டுமென்பது கடினமான வேலையல்ல எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
அதேவேளை, சமூகத்தின் எல்லா துறைகளிலும் பெண்களின் தலைமைத்துவம் இருக்க வேண்டுமெனவும் பிரதமர் குறிப்பிட்டார்.
மேலும், கருத்தியல் ரீதியாக என்ன மாற்றங்களைச் செய்தாலும், நடைமுறையில் அவற்றை நோக்கிச் செயல்பட வேண்டுமென்றால், அணுகுமுறைகளையும் மாற்ற வேண்டும் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
Link: https://namathulk.com