இஸ்ரேலிய பெண் பயணி ஒருவர்மீதும் தங்குமிட உரிமையாளர்மீதும் மேற்கொள்ளப்பட்ட கூட்டுப் பாலியல் வன்புணர்வு நடவடிக்கைகளுக்காக 02 நபர்களை பொலிசார் கைது செய்துள்ள சம்பவம் ஒன்று தென்னிந்தியாவில் இடம்பெற்றுள்ளது.
கர்நாடகாவிலுள்ள தெற்கு மாநிலத்தில் உள்ள கொப்பல் நகரில் கடந்த வியாழக்கிழமை இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த இஸ்ரேலியரும் அவரது தங்குமிட உரிமையாளரும் மூன்று ஆண் பயணிகளுடன், ஸ்டார்கேசிங் எனப்படும் வான்நோக்குச் செயற்பாட்டைச் செய்து கொண்டிருந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் பணம் கேட்டு அவர்களை அணுகியதாகவும், வாக்குவாதங்களைத் தொடர்ந்து, மூன்று ஆண்களும் ஆண் பயணிகளை அருகிலுள்ள நீர் கால்வாய்க்குள் தள்ளி, இரண்டு பெண்களையும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர் என்று கூறப்பட்டுள்ளது.
நீரில் மூழ்கியவர்களில் இந்திய சுற்றுலாப் பயணி ஒருவர் நீரில் மூழ்கி இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலை முயற்சி, கூட்டு பாலியல் பலாத்காரம் மற்றும் கொள்ளை ஆகிய சந்தேகத்தின் பேரில் மூவரில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 2022 ஆம் ஆண்டில் 31,516 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இது 2021 ஆம் ஆண்டை விட 20% அதிகரிப்பு என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது. இதைத் தவிர பதியப்படாத வழக்குகளும் ஏராளம் இருக்கலாம் எனக் கூறப்படுகின்றது.
2012ஆம் ஆண்டில் இடம்பெற்ற நிர்பயா கூட்டுப் பாலியல் கொலை வழக்கின் தாக்கம் காரணமாக 2013ஆம் ஆண்டில் திருத்தப்பட்ட பாலியல் வன்கொடுமைச் சட்டம் கடுமையாக இருந்தபோதும் இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்தும் இடம்பெற்றவண்ணம் உள்ளன.
2022 ஆம் ஆண்டில், ஒரு பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணி கோவாவில் தனது நண்பரின் முன் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானார். இதேபோல கடந்த ஆண்டு இந்திய-அமெரிக்க பெண் ஒருவர் புதுதில்லியில் உள்ள ஒரு விடுதியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறியிருந்தார்.
முக்கியமாக கடந்த ஆண்டு ஒரு ஸ்பானிஷ் சுற்றுலாப் பயணி தனது மனைவி வட இந்தியாவில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறி வெளியிட்ட காணொலி உலகம் முழுவதும் பேசுபொருளாக இருந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு வெளிநாட்டுப் பயணிக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்திருப்பது முக்கியமான விடயமாகப் பார்க்கப்படுகின்றது.
Link: https://namathulk.com