பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோன், தன்னை கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எழுத்தாணை(ரிட்) மனு தாக்கல் செய்துள்ளார்.
தனது சட்டத்தரணிகள் ஊடாக அவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
மாத்தறை நீதவான் நீதிமன்றம் தனக்கு எதிராக பிறப்பித்த பிடியாணையை, இடை நிறுத்தி, இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தேசபந்து தென்னகோன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மாத்தறை வெலிகம பெலேன பகுதியில் உள்ள ஹோட்டலுக்கு முன்பாக 2023 டிசம்பர் 31 ஆம் திகதி நடாத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக, தேசபந்து தென்னகோனை கைது செய்ய மாத்தறை நீதவான் நீதிமன்றம் அண்மையில் பிடியாணை பிறப்பித்திருந்தது.
இந்த பின்புலத்தில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோன் நீதிமன்றத்தில் ஆஜராவதை தவிர்த்து வருகிறார்.
இவரை கைது செய்வதற்காக பொலிஸ் திணைக்களம் பல நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
அதற்கமைய தேசபந்து தென்னகோன் தொடர்பில் தகவல் வழங்குவோருக்கு சன்மானம் வழங்கப்படும் என அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோன் தனது சட்டத்தரணிகள் ஊடாக ரீட் மனுவை தாக்கல் செய்துள்ளார்.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவர் முகமது லாபர் தாஹிர் மற்றும் நீதிபதி சரத் திசாநாயக்க ஆகியோர் அடங்கிய இரண்டு உறுப்பினர்களைக் கொண்ட மேல்முறையீட்டு நீதிமன்ற அமர்வின் இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்படி, மார்ச் 12 ஆம் திகதி மனுவை மீள்பரிசீலணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Link: https://namathulk.com