கீதா கோவிந்தம், டியர் காம்ரேட், பீஷ்மா ஆகிய திரைப்படங்களில் நடித்தன் மூலம் பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா .
கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் பிறந்த இவர் 2016ஆம் ஆண்டு வெளியான “கிரிக் பார்ட்டி” என்ற கன்னடத் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
சுல்தான் படத்தின் மூலம் தமிழிலும், அனிமல் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமான இவர் அண்மையில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக புஷ்பா திரைப்படத்தில் நடித்து பரவலாகப் பேசப்பட்டார்.
கடந்த 14-ம் தேதி ராஷ்மிகாவின் நடிப்பில் வெளியான திரைப்படம் சாவா.
இத் திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்ற நிலையில் இது 500 கோடி வசூலை எட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் தொடர்ந்து 03 திரைப்படங்களுக்கு 500 கோடி வசூல் பெற்ற முதல் நடிகை என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
இதற்கு முன் ஹிந்தி மொழியில் வெளியான புஷ்பா 2இல் 800 கோடியும், ஹிந்தி மொழியில் வெளியான அனிமல் திரைப்படத்தில் 555 கோடியும் வசூலாகியிருந்தது.
இதேவேளை கர்நாடக காங்கிரஸ் அமைச்சர். ரவி கனிகா சமீபத்தில் வெளியிட்ட கருத்தில், பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்க நடிகை ராஷ்மிகா மந்தனாவிற்கு பலமுறை அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், ஆனால் அவர் தனக்கு நேரமில்லை என்று கூறி மறுப்பு தெரிவித்துவிட்டார். இவருக்கு பாடம் புகட்ட வேண்டாமா?’ என்று கேள்வி எழுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு கொடவா சமூகத்தினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, கர்நாடக உள்துறை மந்திரி பரமேஸ்வரா ஆகியோருக்கு கொடாவா தேசிய கவுன்சிலின் தலைவர் நச்சப்பா எழுதியுள்ள கடிதத்தில், ராஷ்மிகா மந்தனாவிற்கு சுயமாக முடிவெடுக்கும் உரிமை உள்ளது என்றும், அவருக்கு அரசியல் ரீதியாக அழுத்தம் கொடுக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
பழங்குடியினத்தைச் சேர்ந்த ராஷ்மிகா மந்தனா, தனது அர்ப்பணிப்பு, திறமையின் மூலம் இந்திய திரைத்துறையில் வெற்றி பெற்றுள்ளார் எனவும், அவரது சமூக பின்னணி காரணமாகவே அவர் குறிவைத்து தாக்கப்படுகிறார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, ராஷ்மிகா மந்தனாவின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்த கருத்து பரவலாகப் பேசப்படுகிறது.