உள்ளூராட்சி மன்ற தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் தொகுதியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சரவணபவன் மற்றும் சந்திரகுமார் ஆகியோரின் கட்சிகளுடன் இணைந்து போட்டியிட உள்ளதோடு, வடக்கு கிழக்கின் ஏனைய இடங்களில் அங்கத்துவக் கட்சிகளுடன் மாத்திரம் இணைந்து போட்டியிட உள்ளதாக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், ரெலோ இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை கூறினார்.
இதன்போது, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இடம்பெற உள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து சபைகளிலும் போட்டியிட உள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.
மன்னார் பிரதேச சபைக்கான தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தில் இடம் பெறும் வழக்கு விசாரணை மீள பெற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில் அதற்கான தேர்தல் அறிவிக்கப்படும் சந்தர்ப்பம் உள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.
எனவே மன்னார் பிரதேச சபை தேர்தலிலும் போட்டியிட தயாராக உள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தினார்.
Link: https://namathulk.com