அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் நடந்ததாகக் கூறப்படும் பாலியல் வன்கொடுமை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்படாவிட்டால், வடமத்திய மாகாணம் முழுவதும் வேலைநிறுத்தம் செய்யப் போவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) எச்சரித்துள்ளது.
சந்தேகநபரை உடனடியாக கைது செய்யக் கோரி, அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள் இன்று வேலைநிறுத்த போராட்டத்தை ஆரம்பித்தனர்.
பாதிக்கப்பட்ட பெண் வைத்தியர், தனது பணி அறைக்குச் செல்லும் போது தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் அரச வைத்தியர் சங்கம் கூடி கலந்துரையாடியதாக சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.
அதற்கமைய , நாளை காலை 8 மணிக்குள் சந்தேகநபர் கைது செய்யப்படாவிட்டால், மாகாணம் முழுவதும் உள்ள மருத்துவ ஊழியர்கள் தங்கள் வேலைநிறுத்தத்தை தீவிரப்படுத்துவார்கள் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவசர சேவைகள் தவிர, அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் ஏனைய அனைத்து ஊழியர்களும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளதாக டொக்டர் சமில் விஜேசிங்க குறிப்பிட்டார்.
Link: https://namathulk.com