அண்மையில் தூக்க மாத்திரைகளை அதிகமாக எடுத்ததன் விளைவாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பாடகி கல்பனா, தற்கொலைக்கு முயற்சித்ததாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில் அதிகளவு மாத்திரைகளை எடுத்ததன் விளைவாகவே தனக்கு இந்த நிலை நேர்ந்ததாக வாக்குமூலம் வழங்கியிருந்தார்.
இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய கல்பனா, “நான் தூக்க மாத்திரைகள் உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக வெளியான தகவல் தவறானது. நான் தற்கொலைக்கு முயலவில்லை, அனைவரும் தவறாக பேசுகிறார்கள். எனக்கும் கணவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் தற்கொலைக்கு முயன்றதாக வெளியான தகவல் முற்றிலும் தவறானது. எனக்கு கடந்த சில மாதங்களாகவே உடல் நலம் சரியில்லை. மகா சிவராத்திரி வரை மிகவும் சிரமப்பட்டு தான் நிகழ்ச்சிகளில் பங்கேற்றேன். என் பின்னால் என் கணவர் தான் உள்ளார். அவரின் உறுதுணையால் தான் அனைத்தும் என்னால் சாதிக்க முடிகிறது.” என்று தெளிவுபடுத்தினார்.
மேலும் ” என்னை பற்றியும், எனது கணவர் பற்றியும் தவறான செய்திகளை பரப்புகின்றனர். பிரபலம் என்றால், சேற்றை வாரி அடிப்பது நியாயமா ? ” என்று அனைவரையும் பார்த்துக் கேள்வி எழுப்பியிருந்தார்.
முக்கியமாக சில ஊடகங்கள் தனது மயக்க நிலையில் வாகனத்தில் ஏற்றும்போதும் புகைப்படமெடுப்பதற்காக தன்னை தாமதப்படுத்தியிருந்தார்கள். இது சரியான விடயமா எனவும் கேள்விகளை எழுப்பியிருந்ததோடு, தவறான தகவல் பரப்புவோர் மீது சட்டப்படி தண்டிக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
Link : https://namathulk.com