பாலியல் குற்றச்சாட்டுக் காரணமாக 23 ஆசிரியர்கள் பதவி நீக்கம்- தமிழக பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை

Aarani Editor
1 Min Read
பதவி நீக்கம்

இந்தியாவின் தமிழகத்தில் பாடசாலை மாணவர்களிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட 23 ஆசிரியர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.

இவர்களது கல்விச் சான்றிதழ்களை இரத்துச் செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

சமீபத்திய நாட்களில் தமிழக பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் மீது அதிகரித்த பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் காரணமாக, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலியல் தொல்லை சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டுகளில் உண்மைத்தன்மை நிரூபணம் செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு, அவர்களின் கல்வித்தகுதி இரத்துச் செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கடந்த மாதம் வெளியிட்டிருந்த கருத்து முக்கியமானது.

இதையடுத்து மாநிலம் முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் மாணவர்களிடம் தவறான செயலில் ஈடுபட்ட ஆசிரியர்களின் பட்டியல் தொகுக்கப்பட்டு, 238 ஆசிரியர், பணியாளர்கள் மீது பாலியல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் இருப்பது அறியப்பட்டது.

அவற்றில் 36 சம்பவங்கள் பாடசாலைகளுக்கு வெளியே இடம்பெற்றுள்ள நிலையில், இது தொடர்பாக கைது செய்யப்பட்ட 11 ஆசிரியர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவற்றில் 11 பேர் குற்றமற்றவர்கள் என்று நிரூபிக்கப்பட்டு மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். மேலும், குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர்களில் 7 பேர் மரணம் அடைந்துவிட்டனர். எஞ்சியவர்கள் மீதான விசாரணை தற்போது நடத்தப்பட்டுவருகிறது.

இதில் 46 ஆசிரியர்கள் மீதான விசாரணை இறுதிகட்டத்தை எட்டியிருந்த நிலையில், 23 பேர் மீதான பாலியல் புகார்கள் நிரூபிக்கப்பட்ட நிலையில் இவர்களை பணி நீக்கம் செய்து இவர்களது கல்விச் சான்றிதழ்களை இரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *