இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் துறவிகளால் கொண்டாடப்படும் நிகழ்வே இந்த மயான ஹோலி ஆகும்.
இது தற்போதைய காலங்களில் மிகவும் பிரபல்யமடைந்து வருகின்றது.
மணிகன்கா காட்டில் நடைபெற்ற இரண்டாவது நாள் நிகழ்வில் அகோரி, நாகா துறவிகளுடன் சுமார் 10,000 பொதுமக்களும் இணைந்து இந்த நிகழ்வைக் கொண்டாடினர்.
இந்தியாவின் வட மாநிலங்களில் எதிர்வரும் மார்ச் 14ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள ஹோலிப் பண்டிகை மிகவும் முக்கியமானது. இப்பண்டிகை ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு வகையாக முன்கூட்டியே கொண்டாடப்பட்டு வருவது வழமை.
கடந்த திங்கட்கிழமை ரங்பர்னி ஏகாதேசி தினத்தன்று உத்தரப் பிரதேசத்தில் ஹோலிக் கொண்டாட்டங்கள் ஆரம்பித்தது. இத் தினத்தன்றுதான் பழம்பெரும் காசி விஸ்வநாதர் கோயிலில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக நம்பிக்கை உள்ளது.
ரங்பர்கி ஏகாதேசியில், வாராணசியின் இரு பெரும் மயானங்களில் துறவிகளால் ஹோலி கொண்டாடும் வழக்கம் காணப்படுகின்றது. இந்த வகை ஹோலி நாகா மற்றும் அகோரி துறவிகளால் புதிதாகக் கொண்டாடத் துவங்கி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“ஐதீகத்தில் இடம்பெறாத இந்த மயான ஹோலி சுமார் பத்து வருடங்களாகக் கொண்டாடப்படுகிறது. பொதுமக்களுடன் வெளிநாட்டவர்களும் இதை வேடிக்கை பார்க்க திரளாக வருகின்றனர். இதனால், மயான ஹோலிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் ஒவ்வொரு வருடமும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது” என வாராணசி ஆட்சியரான எஸ்.ராஜலிங்கம் தெரிவித்தார்.
இந்த மயான ஹோலி திங்கட்கிழமை, கங்கை கரையின் பிரபலமான ஹரிச்சந்திரா காட் மயானத்தில் கொண்டாடப்பட்டது. இதன் மறுநாளான செவ்வாய்க்கிழமை பிரதோஷத்தை முன்னிட்டு இரண்டாவது நாளும் மயான ஹோலி, வாராணசியில் மட்டும் கொண்டாடப்பட்டது.
இதில், காசி விஸ்வநாதர் கோயிலில் இருந்து சிறிய, பெரிய உடுக்கைகளை அடித்தபடி, ஊர்வலமாக மணிகன்கா காட்டில் நாகா, அகோரி துறவிகள் நுழைந்து எரிந்த உடல்களின் சாம்பல்களை ஒருவர் மீது மற்றவர் தடவியும், தூவியும் ஹோலி விளையாடினர். இவர்களுடன் மயான சாம்பலின் ஹோலி விளையாட்டில் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
இந்த இரண்டு மயானங்களுக்கு வாராணாசியை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து இறந்தவர்களின் உடல்கள் தொடர்ந்து வந்தபடி இருக்கும். இந்த உடல்கள் மயான ஹோலியை முன்னிட்டு சுமார் 2 மணி நேரம் மயானங்களின் முன்பு காத்திருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Link : https://namathulk.com
