வவுனியா மாவட்டத்தில் படையினரின் தேவைக்காக கையகப்படுத்தப்பட்ட பொதுமக்களுக்கு சொந்தமான காணிகளை விடுவித்து உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற ஒத்திவைப்புவேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இதனை கூறினார்.
வவுனியா மாவட்டத்தில் கடந்தகாலங்களில் விமானப்படைக்கு சொந்தமான விமானநிலைய விஸ்த்தரிப்பிற்காக 3 கட்டங்களாக காணிகள் கையகப்படுத்தப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் கூறினார்.
அத்துடன், மூன்றாம் கட்டமாக 1985ம் ஆண்டு பொதுமக்களின் 231.67 ஏக்கர் காணி சுவீகரிக்கப்பட்டதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.
மேலும், இந்தக்காணிகள் வவுனியா நகரிற்கு அண்மையில் ஏ9 வீதியில் அமைந்துள்ளதாக கூறிய பாராளுமன்ற உறுப்பினர், நகரவிஸ்த்தரிப்புக்கு தேவையான முக்கியமான இடத்தில் காணப்படும் இந்த காணியை உரிமையாளர்களுக்கு மீள ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தினார்.
இதேபோன்று ஈச்சங்குளம் பிரதேசத்தில் அமைந்திருந்த துயிலும் இல்லம் அமைந்திருந்த காணியில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதனையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கூறினார்.
அத்துடன் கனகராயன்குளத்தில் அமைந்துள்ள 561வது டிவிசன் இராணுவ முகாமிற்கு 3 ஏக்கர் அரசகாணி ஒதுக்கப்பட்டபோதிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலுள்ள தனியாருக்கு சொந்தமான 9 ஏக்கர் காணியும், பொதுமயானத்திற்கு சொந்தமான 5 ஏக்கர் காணியும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் அதனையும் விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளித்த துறைசார் பிரதி அமைச்சர் ஜலிந்த ருவான் கொடித்துவக்கு மக்கள் பிறந்து வளர்ந்து வாழ்ந்த இடங்களை அவர்களிடமே மீள ஒப்படைக்கவேண்டும் என்பதே ஜனாதிபதியின் நிலைப்பாடு என கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Link : https://namathulk.com