இலங்கை வைத்தியசாலையில் உள்ள மருந்து பற்றாக்குறையை உடனடியாக நிவர்த்தி செய்வதற்காக, 20mg/2ml ஃபுரோஸ்மைற்கான 50,000 ஊசிகளை இந்திய அரசு நன்கொடையாக வழங்கியுள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக, இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இந்த மருந்துப் பொருளை சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸவிடம் இன்று கையளித்தார்.
சுகாதார அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க, மருத்துவ விநியோகப் பிரிவின் இயக்குநர் தேதுனு டயஸ் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இலங்கையில், இந்தியாவின் முயற்சிகளுக்கு சுகாதாரத் துறையும் ஒரு முக்கிய பகுதியாக இருந்து வருவதாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் எடுத்துரைத்தது.
நாடளாவிய ரீதியில் ‘1990 சுவ செரிய’ ஆம்புலன்ஸ் சேவை, டிக்கோயாவில் 150 படுக்கைகள் கொண்ட பல்நோக்கு வைத்தியசாலையின் கட்டுமானம், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒரு புதிய அறுவை சிகிச்சை பிரிவின் கட்டுமானம், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைகளில் உட்கட்டமைப்பு உருவாக்கம் மற்றும் மேம்படுத்தல், அத்துடன் உபகரணங்கள் வழங்கல் ஆகியவை இந்திய அரசாங்கத்தினால் இலங்கையின் சுகாதார துறைக்கு அளிக்கப்பட்ட உதவிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Link: https://namathulk.com