தென்கிழக்காசிய நாடுகளில் ஒன்றான கம்போடியா நாட்டின் 900 வருடம் பழைமையான அங்கோர்வாட் கோயில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒன்றாகக் காணப்படுகின்றது. ஏறத்தாழ 402 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தக் கோயில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக இடம் பிடித்திருக்கிறது.
கெமர் மொழியில், ‘அங்கோர்’ என்றால் ‘நகரம்’ என்று பொருள். ‘வாட்’ என்றால் ‘கோயில்’ என்று பொருள். எனவே அங்கோர்வாட் என்றால் ‘கோவில் நகரம்’ என்று பொருள்படுகின்றது.
அங்கோர்வாட் கோயில் 12ம் நூற்றாண்டில் இரண்டாம் சூரியவர்மனால் கட்டப்பட்டது. கம்போடிய அரசு 1850ம் ஆண்டு முதல் அங்கோர்வாட் கோயிலை அதன் முக்கியத்துவம் கருதி நாட்டின் கொடியில் அச்சிட்டுள்ளது.
கம்போடியாவில் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தற்போது அங்கோர்வாட் கோயில் வளாகத்தில் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட ஒரு தலைக்கு, பொருந்தக்கூடிய புத்தர் சிலையின் உடற்பகுதியைத் தற்போது கண்டுபிடித்துள்ளனர்.
12 அல்லது 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக நம்பப்படும் இந்தச் சிலை, கம்போடிய மற்றும் இந்திய நிபுணர்கள் குழுவால் தோண்டப்பட்டபோது கண்டுபிடிக்கப்பட்டது. இது 1.16 மீட்டர் உயரத்தையுடையதாகவும், அங்கோர்வாட்டின் பேயோன் கோயிலுடன் தொடர்புடைய பேயோன் கலை பாணியிலும் உள்ளதாகச் சொல்லப்படுகிறது.
சிலையின் வடிவமைப்பானது செதுக்கப்பட்ட நகைகள், அங்கி மற்றும் புடவை ஆகியவற்றோடு மார்பின் குறுக்கே ஒரு தனித்துவமான இடது கை சைகையுடன் காணப்படுகிறது. இதன் வலது கைப் பகுதி மட்டும் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சிலையின் தலை, 1927 ஆம் ஆண்டு பிரெஞ்சு காலனித்துவ காலத்தில் அதே கோவிலில் கண்டுபிடிக்கப்பட்டது, தற்போது அது கம்போடியாவின் தலைநகர் புனோம் பென்னில் உள்ள முக்கிய தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
தலை கண்டுபிடிக்கப்பட்ட இடத்திலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் உடல் பகுதி கண்டுபிடிக்கப்பட்டதாகவும், ஒப்டிகல் எலக்ட்ரானிக் ஸ்கேன் மூலம் அவை ஒன்றுடன் ஒன்று பொருந்தியிருப்பதை உறுதிப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Link : https://namathulk.com