பொது நிறுவனங்களுக்கான அணுகல் வசதிகள் விசேட தேவையுடையோருக்கு வழங்கப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி 14 வருடங்கள் கடந்துள்ளபோதும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா சுட்டிக்காட்டினார்.
அத்துடன், இந்தத் தீர்ப்பை முறையாக நடைமுறைப்படுத்துவதற்கு விசேட தேவையுடையோர் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தினூடாக தேவையான தலையீடு வழங்கப்படும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.
பத்தாவது பாாராளுமன்றத்திற்கான விசேட தேவையுடையோர் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா தெரிவுசெய்யப்பட்டார்.
சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் ஒன்றியத்தின் முதலாவது கூட்டம் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.
இதன்போது, ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவராக எதிர்க்கட்சியின் பிரதம கொரடா கயந்த கருணாதிலக்க தெரிவுசெய்யப்பட்டார்.
அத்துடன், மற்றுமொரு பிரதி இணைத் தலைவராக பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
விசேட தேவையுடையோர் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் திருப்தி அடைந்து சமமாக நடத்தப்படும் ஒரு சமூகத்தை உருவாக்குவதே தூரநோக்காக இருக்க வேண்டும் என இதன்போது சபாநாயகர் கூறியுள்ளார்.
அதற்காக கல்வி, வேலைவாய்ப்பு, போக்குவரத்து மற்றும் அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் ஏனைய சேவைகளுக்கு சமமான அணுகலை உறுதி செய்யும் ஒரு சமூகத்தை உருவாக்குவதே அடிப்படை நோக்கமாக இருக்க வேண்டும் எனவும் சபாநாயகர் வலியுறுத்தினார்.
பாராளுமன்றம் என்ற ரீதியில் விசேட தேவையுடையோர் தொடர்பில் முழு நாடும் கொண்டிருக்கும் நிலைப்பாட்டை உணர்திறன் மிக்கதாகவும், நேர்மையானதாகவும் மாற்றுவதே ஒன்றியத்தின் பிரதான நோக்கம் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா குறிப்பிட்டார்.
விசேட தேவையுடையோருக்காக நடைமுறையில் உள்ள 28 வருடங்கள் பழமையான சட்டத்தை மறுசீரமைத்து தற்காலத்திற்குப் பொருத்தமான சட்டமாக மாற்றுவது, தேசிய கொள்கையை எதிர்காலத்திற்குப் பொருத்தமானதாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் ஒன்றியம் எதிர்பார்த்திருப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் கூறினார்.
Link : https://namathulk.com