அமெரிக்கன் ஏர்லைன்ஸின் போயிங் 737-800 ரக விமானம் என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விமானத்தில் 172 பயணிகளும், ஆறு பணியாளர்களும் இருந்ததாக அமெரிக்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது. அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பலத்த காயங்கள் குறித்து எந்த தகவலும் இல்லாத நிலையில் 12 பேர் லேசான காயங்களுக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதை விமான நிலையம் பின்னர் உறுதிப்படுத்தியுள்ளது.
குறித்த விமானம் அருகிலுள்ள கொலராடோ ஸ்பிரிங்ஸிலிருந்து புறப்பட்டு டெக்சாஸில் உள்ள டல்லாஸ் போர்ட் வொர்த் சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்ததாகவும் “இயந்திர அதிர்வுகள்” இருப்பதாக விமானக் குழுவினர் தெரிவித்ததை அடுத்து டென்வருக்குத் அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தரையிறங்கிய சில நிமிடங்களில் விமானத்தின் அடிப்பகுதிக்கு அருகில் தீப்பிடித்ததாகவும், பயணிகள் பாதுகாப்பாக தரையை அடைய ஊதப்பட்ட சறுக்குகளைப் பயன்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட அமெரிக்காவில் விமானப் பாதுகாப்பு குறித்த கேள்விகள் சமீபத்தில் தொடர்ச்சியாக எழுப்பப்பட்ட நிலையில், குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை அனைவரையும் பதட்டத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம், அரசாங்க செலவு சேமிப்பு முயற்சிகளின் ஒரு பகுதியாக நூற்றுக்கணக்கான தகுதிகாண் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்துள்ளது. பணிநீக்கம் செய்யப்பட்ட FAA ஊழியர்களில் பராமரிப்பு இயந்திரவியல், சுற்றுச்சூழல் இணக்கத் தொழிலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர்கள் அடங்குகின்றனர்.
விமான விபத்துக்களைத் தொடர்ந்து இந்த விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Link : https://namathulk.com