நாட்டில் தற்போது பாரிய சர்ச்சைக்குரிய விடயமாக மாறியுள்ள பட்டலந்த வதை முகாம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு விளக்கமளித்துள்ளார்.
இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க விளக்க காணொளியொன்றினை வெளியிட்டுள்ளார்.
1999ஆம் ஆண்டு படலந்த ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கவே தன்னை விசாரணைக்கு அழைத்ததாக முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார்.
அத்துடன், 87ம் ஆண்டில் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர் ஜே.வி.பி. நாடுமுழுவதும் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டதாகவும், அந்தக் கட்டத்தில் நாட்டின் பாதுகாப்பை நிலைநாட்டும் பொறுப்பு ஜே.ஆர். ஜயவர்த்தனவினால் அமைச்சர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார்.
அந்தக் காலகட்டத்தில் படலந்த ஒரு உர உற்பத்தி நிலையமாக செயற்பட இருந்ததாகவும முன்னாள் ஜனாதிபதி கூறினார்.
அக்காலகட்டத்தில் சப்புகஸ்கந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியையும் ஜே.வி.பி.யினர் படுகொலை செய்திருந்ததாகவும், இன்னும் பல பொலிஸ் அதிகாரிகளையும், மாகாண சபை உறுப்பினர்களையும் படுகொலைசெய்திருந்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
அந்தக் கட்டத்தில் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் விஜேரத்தின, தன்ரனை தொடர்பு கொண்டு ராணுவ அதிகாரிகள் மற்றும் பொலிசாருக்கு பாதுகாப்பாக வசிப்பதற்கு படலந்தையில் காலியாக இருந்த வீடுகளை ஒதுக்கிக் கொடுக்க வழிசெய்யுமாறு கேட்டுக் கொண்டதாக முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார்.
அதன் பிரகாரம் அந்த வீடுகளை அப்போதைய களனி பொலிஸ் அத்தியட்சகர் நளின் தெல்கொட அவர்களின் பொறுப்பில் கையளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அதன் பின்னர் 1994ம் ஆண்டின் பின்னர் சந்திரிக்கா அரசாங்கம், பட்டலந்தையில் வதைமுகாம் ஒன்று இருந்ததா என்பதைக் கண்டறிய விசாரணை ஆணைக்குழுவொன்றை அமைத்ததாகவும், அதன் முக்கிய நோக்கம் அரசியல் ரீதியாக சேறுபூசுவதாகும் எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார்.
அதன்போது, பொலிஸ் மா அதிபர் ஊடாக வீடுகளை வழங்கியிருக்கலாம் என்பதே ஆணைக்குழுவின் நிலைப்பாடு, மற்றபடி தனக்கு எதிராக எந்தவொரு குற்றச்சாட்டும் இல்லை என முன்னாள் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
அத்துடன், யாரும் பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை ஒழித்து வைத்திருக்கவில்லை எனவும் எந்தவொரு அரசாங்கமும் அதனைக் கொண்டு அரசியல் செய்ய முயற்சிக்கவில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி கூறினார்.
Link: https://namathulk.com