அநுராதபுரம் வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம், பெண்களுக்கு எதிரான வன்முறைக் குற்றங்களை குறைப்பதற்கான அரசாங்கத்தின் கூட்டு முயற்சிகளின் தோல்வி குறித்து மீண்டும் ஒரு கடுமையான கருத்தாடலை ஏற்படுத்தியுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
இந்த விடயம் தொடர்பாக தேசிய மக்கள் சக்தியின் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
வன்முறையை எதிர்கொண்ட பெண்ணுக்கு, தேசிய மக்கள் சக்தியின் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒற்றுமையையும் அனுதாபத்தையும் வெளிப்படுத்துவதாக கூறினர்.
அதேவேளையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் சமூகப் பிரிவு அல்லது அடையாளம் எதுவாக இருந்தாலும், பெண்களுக்கு எதிரான அவமதிப்பு மற்றும் வன்முறை கலாச்சாரத்தை ஒழிப்பதே பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் முக்கிய பணியாக இருக்க வேண்டும் என்பதை தேசிய மக்கள் சக்தியின் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
அத்துடன், கொலை தொடக்கம் பாலியல் வன்முறை வரையில் பார்க்கும் போது, தொழில் புரியும் இடம் முதல் சைபர் தளம் வரையில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இடம்பெறுவதாக தேசிய மக்கள் சக்தியின் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டிக்காட்டினர்.
பெண்கள் மீதான துஷ்பிரயோகம் பற்றி பேசுவது இன்று ஒரு பொதுவான விடயமாகி இருப்பதுடன், அது பெண்மைக்கு எதிரான கலாச்சாரத்தை தோற்றுவிக்கும் பெரிய சிக்கலை காட்டுவதாக தேசிய மக்கள் சக்தியின் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
மேலும், இணையவழி துஷ்பிரயோகம் மற்றும் வாய்மொழி துன்புறுத்தல் என்பன பெண்களை இழிவுபடுத்தும் கலாச்சாரத்துடன் இணைந்த பகுதியாகும் என்பதைப் புரிந்துகொள்வது அவசியம் எனவும் தேசிய மக்கள் சக்தியின் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டனர்.
பாதிக்கப்பட்டவரின் அறிக்கையை ஊடகங்களில் வெளியிடுவதல் மற்றும் நமது சமூகத்தில் பெண்களை நெருக்கடிக்கு உள்ளாக்கும் வகையிலான வன்முறைக் குற்றங்கள் குறித்து உணர்வுகள் குன்றியிருப்பதையிட்டு வருத்தமடைவதாக தேசிய மக்கள் சக்தியின் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டடுள்ளது.
சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் மற்றும் ஊடகங்கள், வன்முறை மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளானவர்கள் தொடர்பில் உணர்வுபூர்வமாகவும் அவர்களின் கெளரவம் பாதுகாக்கப்படும் வகையில் செயலாற்ற வேண்டும் எனவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், பாதிக்கப்பட்ட பெண்ணின் தனியுரிமையைப் பாதுகாக்குமாறும், துன்புறுத்தல் சம்வபம் தொடர்பில் உண்மைக்கு புறம்பான கதைகளை கூறுவதையும் பரப்புவதையும் தவிர்க்குமாறு குறித்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளைக் கையாள பொலிசார், நீதிபதிகள் மற்றும் ஊடகங்களுக்கு தெளிவான மற்றும் குறிப்பிட்ட தரநிலைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, பெண்களுக்கு எதிரான வன்முறையை மட்டுப்படுத்துவதற்கான சட்ட கட்டமைப்பு, ஊடகங்கள் மற்றும் பொலிஸ் துறைகளில் சிறப்பு சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
Link: https://namathulk.com