ஏகாதிபத்திய சக்திகள் ஏறக்குறைய ஒரு தசாப்த காலமாக, யேமன் மக்களுக்கு எதிராக ஒரு போரை நடத்தி வருகின்றன.
ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, பாரிய பட்டினி மற்றும் நோய்களுக்கு வழிவகுத்த சவுதி அரேபியாவின் முற்றுகைகள் உட்பட இனப்படுகொலைத் தாக்குதலில் 377,000ம் பேர்கள் யேமனில் கொல்லப்பட்டுள்ளனர். முதலில் ஒபாமாவின் கீழும், பின்னர் ட்ரம்பின் கீழும், பிரிட்டன் உட்பட அதன் ஏகாதிபத்திய கூட்டாளிகளின் உதவி மற்றும் ஆதரவுடனும், 54 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான இராணுவ உபகரணங்களுடன் அமெரிக்கா இந்தத் தாக்குதலுக்கு நிதியளித்துள்ளது என்று கூறப்படுகிறது.
சோவியத் யூனியன் கலைக்கப்பட்டபின்னர், அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் தொடங்கப்பட்டு வழிநடத்தப்பட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலான முடிவில்லாத போரின் ஒரு பகுதியாகவே யேமனின் பேரழிவு காணப்படுகின்ற நிலையில், அமெரிக்காவை விட 700 மடங்கு சிறிய மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கொண்ட ஒரு நாடு, அமெரிக்காவிற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகக் குறிப்பிடப்பட்டு, அவற்றிலிருந்து அமெரிக்காவைப் பாதுகாக்க போர்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது என்று வல்லரசுகள் இதனை நியாயப்படுத்தியுள்ளன.
அந்தவகையில் செங்கடலில் கப்பல் போக்குவரத்து மீதான ஹவுத்தி தாக்குதல்களை காரணம்காட்டி கடந்த சனிக்கிழமை ஹவுத்தி இலக்குகள் மீது “தீர்க்கமான மற்றும் சக்திவாய்ந்த” வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்கா தெரிவிக்கிறது.
யேமன் மீதான குறித்த அமெரிக்க தாக்குதல்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை உட்பட 53 ஆக உயர்ந்துள்ளதாக ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஹவுத்தி சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அனிஸ் அல் அஸ்பாஹி, ஐந்து குழந்தைகள் மற்றும் இரண்டு பெண்கள் உட்பட 53 பேர் கொல்லப்பட்டதாகவும், 98 பேர் காயமடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இறந்தவர்களில் சில முக்கிய ஹவுத்தி பிரமுகர்களும் அடங்குவதாக வாஷிங்டன் தெரிவித்திருந்தாலும், ஹவுத்திக் குழு இதனை உறுதிப்படுத்தவில்லை என்பது முக்கியமானது.
யேமன் மீது அமெரிக்கா தனது தாக்குதல்களைத் தொடரும் வரை செங்கடலில் உள்ள அமெரிக்கக் கப்பல்களை தனது போராளிகள் குறிவைப்பார்கள் என்று ஹவுத்தி தலைவர் அப்துல் மாலிக் அல் ஹவுத்தி தெரிவித்துள்ள நிலையில், ஹவுத்தி தாக்குதல்கள் நிறுத்தப்படும் வரை இடைவிடாத ஏவுகணைத் தாக்குதல்களை நிறுத்தப்போவதில்லையென அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்ஸெத் உறுதியாகக் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலை தனது எதிரியாகக் கருதும் ஹவுத்திகள் காசா மீதான முற்றுகையை இஸ்ரேல் நீக்கும்வரை செங்கடல் கப்பல் போக்குவரத்தைத் தொடர்ந்து குறிவைக்கப் போவதாக தெரிவித்துள்ளனர், மேலும் தங்கள் படைகள் குறித்த அமெரிக்கத் தாக்குதல்களுக்கும் பதிலடி கொடுக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.
ஹவுத்திகளிடம் நேரடியாக உரையாற்றிய டிரம்ப், அவர்கள் நிறுத்தவில்லை என்றால், “நீங்கள் இதற்கு முன்பு பார்த்திராதது போல் நரகம் உங்கள் மீது மழையாகப் பொழியும்” என்று குறிப்பிட்டுள்ள கருத்து முக்கியமானதாகும்.
Link : https://namathulk.com