நீதிமன்றத்திற்கு சவால்விடும்வகையில் உத்தரவை மீறி வெனிசுவேலாவைச் சேர்ந்த நபர்களை நாடுகடத்திய  டிரம்ப் அரசு.

Sivarathan Sivarajah
2 Min Read
டிரம்ப் அரசு

வெனிசுவேலாவைச் சேர்ந்த ஒரு கும்பலைச் சேர்ந்ததாகக் கூறப்படும் உறுப்பினர்களை அமெரிக்காவிலிருந்து நாடுகடத்துவதற்கு நீதிமன்றம் தடை விதித்த போதிலும், ட்ரம்ப் நிர்வாகம் ஒரு நீதிபதிக்கு அதன் நடவடிக்கைகளைத் தடுக்க அதிகாரம் இல்லை என்று ஒரு அறிக்கையில் குறிப்பிட்ட விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஏலியன் எதிரிச் சட்டத்தின் போர்க்கால அதிகாரங்களைப் பயன்படுத்தி, கடத்தல், மிரட்டி பணம் பறித்தல் மற்றும் ஒப்பந்தக் கொலைகள் ஆகியவற்றுடன் தொடர்புடைய வெனிசுவெலா கும்பலான டிரென் டி அரகுவாவின் 200 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை விரைவாக நாடுகடத்தியுள்ளார்.

இந்நிலையில் ஏலியன்கள் எனக் குறிப்பிட்டு வெனுவெலாவைச் சேர்ந்த 200ற்கும் மேற்பட்ட வெனிசுவேலர்கள் அமெரிக்காவிலிருந்து எல் சால்வடாரில் உள்ள ஒரு சூப்பர்மேக்ஸ் சிறைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

அமெரிக்க அரசாங்கமோ அல்லது எல் சால்வடோரோ கைதிகளை அடையாளம் காணவில்லை என்றும் அவர்கள் குற்றவியல் அல்லது கும்பல் உறுப்பினர் என்று கூறப்படும் விவரங்களையும் வழங்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

விமானங்களில் இருந்து ஆயுதமேந்திய அதிகாரிகளால் கைகள் மற்றும் கால்களைக் கட்டிக்கொண்டு குறித்த மக்கள் அழைத்துச் செல்லப்படுவதை ஒரு காணொலி ஒலிபரப்பியுள்ளது. அமெரிக்காவிற்கு எதிராக “ஒழுங்கற்ற போரில்” ஈடுபட்டதற்காக குறித்த கும்பலின் உறுப்பினர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு எதிராக ஏலியன் எதிரிச் சட்டம் கையாளப்பட்டுள்ளது. ஏலியன் எதிரிச் சட்டம் என்பது கடைசியாக இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானிய-அமெரிக்க குடிமக்களைக் காவலில் வைக்க பயன்படுத்தப்பட்டது.

இதனைத் தடுக்க நீதிபதி ஜேம்ஸ் போஸ்பெர்க் மேற்கொண்ட நடவடிக்கைகளையும் மீறி இச்செயற்பாடு இடம்பெற்றுள்ளது. கடந்த சனிக்கிழமை மாலை, வாஷிங்டன் டி. சி. யில் உள்ள அமெரிக்க மாவட்ட நீதிபதி ஜேம்ஸ் போஸ்பெர்க், டிரம்ப்பின் பிரகடனத்தின் கீழ் இவர்கள் நாடுகடத்தப்படுவதை 14 நாட்கள் நிறுத்த உத்தரவிட்டார்.

நாடுகடத்தப்பட்டவர்களுடன் விமானங்கள் ஏற்கனவே புறப்பட்டுவிட்டன என்று வழக்கறிஞர்கள் அவரிடம் கூறிய பிறகு, நீதிபதி போஸ்பெர்க் விமானங்கள் திரும்பிச் செல்ல வாய்மொழி உத்தரவு பிறப்பித்தார். இருப்பினும் அந்த உத்தரவு அவரது எழுத்துப்பூர்வ தீர்ப்பின் ஒரு பகுதியாக இல்லை என்று அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

“ஒரு நகரத்தில் உள்ள ஒரு நீதிபதி ஒரு விமானத்தின் நகர்வுகளை இயக்க முடியாது. அமெரிக்க மண்ணிலிருந்து வெளிநாட்டு ஏலியன் பயங்கரவாதிகள் உடல் ரீதியாக வெளியேற்றப்பட்டார்கள்” என்று வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இதில் நீதிமன்றத்திற்கு “சட்டபூர்வமான அதிகாரம் இல்லை” என்றும், ஒரு ஜனாதிபதி வெளியுறவு விவகாரங்களை எவ்வாறு நடத்துகிறார் என்பதில் தலையிட கூட்டாட்சி நீதிமன்றங்களுக்கு பொதுவாக அதிகாரம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். இந்தக் கருத்து அனைவரிடமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *