இரண்டாம் உலகப் போரின் போது நாஜிக்களின் பிரச்சாரத்தை எதிர்ப்பதற்காக முதன்மையான ஒரு வானொலி சேவையான வாய்ஸ் ஆப் அமெரிக்கா அமைக்கப்பட்டது. இது தற்போது ஒவ்வொரு வாரமும் உலகளவில் நூற்றுக்கணக்கான மில்லியன் மக்களை சென்றடைகின்ற செய்திச் சேவையாக வளர்ச்சியடைந்துள்ளது.
தற்போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கூட்டாட்சி நிதியுதவி பெறும் செய்தி நிறுவனமான வாய்ஸ் ஆப் அமெரிக்காவை “டிரம்பிற்கு எதிரானது” மற்றும் “தீவிரவாதி” என்று குற்றம் சாட்டி, அதை மூடுவதற்கான உத்தரவொன்றில் கையெழுத்திட்டுள்ளார்.
அரசியல்வாதிகள் மற்றும் வலதுசாரி ஊடகங்கள், ஒளிபரப்பாளரை விமர்சித்தமையைக் காரணம் காட்டியுள்ள வெள்ளை மாளிகை, “வரி செலுத்துவோர் இனி தீவிர பிரச்சாரத்திற்கு அடிமையாகாமல் இருப்பதை இது உறுதி செய்யும்” என்று அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில் வாய்ஸ் ஆப் அமெரிக்காவின் இயக்குனர் மைக் அப்ரமோவிட்ஸ், அவரும் கிட்டத்தட்ட 1,300 பேர் கொண்ட அவரது முழு ஊழியர்களும் ஊதிய விடுப்பில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ட்ரம்பின் இந்த நடவடிக்கையானது “சுதந்திரமான பத்திரிகைக்கான அமெரிக்காவின் நீண்டகால உறுதிப்பாட்டை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது” என்று அமெரிக்க பத்திரிகையாளர்களின் முன்னணி பிரதிநிதி குழுவான நேஷனல் பிரஸ் கிளப் கருத்து வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதியின் உத்தரவு வாய்ஸ் ஆப் அமெரிக்காவின் தாய் நிறுவனமான US Agency for Global Media (USAGM) ஐ குறிவைப்பதாகக் கூறப்படுகின்றது, இது கம்யூனிசத்தை எதிர்க்க முதலில் அமைக்கப்பட்ட ரேடியோ ப்ரீ ஐரோப்பா மற்றும் ரேடியோ ப்ரீ ஆசியா போன்ற இலாப நோக்கற்ற நிறுவனங்களுக்கும் நிதியளிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Link : https://namathulk.com