வரலாற்றில் முக்கியச் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி, பக்கிங்ஹாம் அரண்மனைக்கு விஜயம் செய்தபோது சார்லஸ் மன்னர் அவரை சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பானது கனடாவிற்கான ஆதரவை வலுப்படுத்துவதாக அமைந்திருந்ததாகச் சொல்லப்படுகின்றது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அச்சுறுத்தல்களையும், பொருளாதார ரீதியான சவால்களையும் கனடா பலமாக எதிர்கொண்டுவருகின்றது. இந்த நிலையில் மன்னருடன் இடம்பெற்ற இந்தச் சந்திப்பானது கனடா நாட்டின் அரசியலில் முக்கியத்துவம் பெறுகின்றது.
குறித்த சந்திப்பானது வெளிப்படையானவகையில் மன்னரிடமிருந்து கனடாவிற்கான ஆதரவாகச் சொல்லப்படாவிட்டாலும் குறியீடுகள் மூலமாக உணர்த்தப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இருவருக்கிடையேயான சந்திப்பின்போது மன்னர் சிவப்புநிறத்திலான கழுத்துப்பட்டி அணிந்திருந்தார் என்றும், இது கனடாவிற்கான ஆதராவாகக் கருதப்படுகிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின்போது கார்னி தன்னுடைய ஆடர் ஆப் கனடா முத்திரை உடைந்துவிட்டதாகக் குறிப்பிட்டபோது மன்னர் அதற்கு “உங்களுக்கு இன்னொரு முத்திரை வேண்டுமா?” என நகைச்சுவையாகப் பதில் கூறிய விடயம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்த சந்திப்பில் முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டிருந்தன. மேலும் முன்னர் பக்கிங்ஹாம் அரண்மனையில் நடந்த ஒரு மரம் நடும் விழாவில், தேர்ந்தெடுக்கப்பட்ட மரம் ஒரு மேப்பிள் மரம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படியாக அரண்மனையிலிருந்து பல நிகழ்வுகள் கனடா நாட்டிற்கு ஆதரவான குறியீடுகளாகக் காணப்படுகின்றமை முக்கியமானது.
இந்தச் சந்திப்பும் மற்றும் கனடாவிற்குச் சாதகமான குறியீடுகளும் பல விவாதங்களைத் தோற்றுவித்துள்ள நிலையில் இதன் பின்னர் மன்னருக்கும் அமெரிக்காவிற்குமான உறவுகள் எப்படி அமையப்போகின்றது என்பது தொடர்பாகவும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுவருகின்றன.
Link : https://namathulk.com