காஸாவிற்கும் இஸ்ரேலுக்குமான யுத்த நிலமைகளின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், காஸா மீது இஸ்ரேல் நடத்திய வான்வெளித் தாக்குதல்களில் 340 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஹமாஸுக்கு சொந்தமான “பயங்கரவாத இலக்குகள்” என்று அழைக்கப்படும் இலக்குகளை, தாங்கள் இலக்காகக் கொண்டதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
காசாவின் துணை உள்துறை அமைச்சரும், பிராந்தியத்தின் மிக உயர்ந்த ஹமாஸ் பாதுகாப்பு அதிகாரியுமான மஹ்மூத் அபு வபா குறித்த ஒரு தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
காசா யுத்த நிறுத்தத்தை நீட்டிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் ஒரு உடன்பாட்டை எட்டத் தவறவிட்ட நிலையில், ஜனவரி 19 அன்று போர்நிறுத்தம் தொடங்கியதிலிருந்து காசாவில் நடந்த மிகப்பெரிய வான்வழித் தாக்குதலாக இத் தாக்குதல் குறிப்பிடப்படுகின்றது.
காசாவில் தாக்குதல்கள் ஆரம்பித்தபோது, புனித ரமலான் மாதமாக இருந்ததால், பலர் விடியற்காலை உணவை உட்கொண்டிருந்த நிலையில், 20ற்கும் மேற்பட்ட இஸ்ரேலிய போர் விமானங்கள் வானில் பறந்ததாகவும், பின்னர் விமானங்கள் காசா நகரம், ரபா மற்றும் கான் யூனிஸ் ஆகிய இடங்களில் உள்ள இலக்குகளைத் தாக்கத் தொடங்கியதாகவும் நேரடிச் சாட்சிகள் தெரிவிக்கின்றன.
குறித்த தாக்குதல்களுக்கு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் ஆகியோர் உத்தரவிட்டதாக பிரதமர் அலுவலகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இது எங்கள் பணயக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் பலமுறை மறுத்ததையும், அமெரிக்க ஜனாதிபதி தூதர் ஸ்டீவ் விட்கோப் மற்றும் மத்தியஸ்தர்களிடமிருந்து பெற்ற அனைத்து முன்மொழிவுகளையும் நிராகரித்ததையும் அடியொற்றியது. இஸ்ரேல், இனிமேல், ஹமாஸுக்கு எதிராக அதிக இராணுவ பலத்துடன் நடவடிக்கை எடுக்கும்” என்று குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போர்நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்ததற்காக இஸ்ரேல் குறித்த துரோகச் செயலைச் செய்ததாக குற்றம் சாட்டிய ஹமாஸ்,. காசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீதமுள்ள இஸ்ரேலிய பிணைக் கைதிகளின் “அறியப்படாத தலைவிதிக்கு” இஸ்ரேல் வழிகோலுவதாயும் குறிப்பிட்டுள்ளது.
மேலும் ஹமாஸ் இன்னும் போரை மீண்டும் தொடங்குவதாக அறிவிக்கவில்லை, அதற்கு பதிலாக மத்தியஸ்தர்களையும் ஐக்கிய நாடுகள் சபையையும் தலையிடுமாறு அழைப்பு விடுத்துள்ள நிலையில், குறித்த தாக்குதல்களை நடத்துவதற்கு முன்பு இஸ்ரேலால் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்துடன் கலந்தாலோசிக்கப்பட்டது என்று வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ள விடயம் முக்கியமானது.
Link : https://namathulk.com