வடக்கு பாகிஸ்தானில் பனிப்பாறைகளில் ஏறும் அரிதாகக் காணப்படும் நான்கு பனிச்சிறுத்தைகளின் அரிய காட்சிகள் வெளியாகி அனைவரையும் வியப்பிலாழ்த்தியுள்ளன. பாகிஸ்தானின் வடக்கில் உள்ள பாறை நிலப்பரப்பு “உலகின் சிறந்த பனிச்சிறுத்தை வாழ்விடம்” என்று சுற்றுச்சூழல் மானுடவியலாளர்களால் கூறப்படுகின்றது.
உலகின் மிகவும் எளிதில் கண்டுபிடிக்க முடியாத உயிரினங்களில் பனிச்சிறுத்தைகளும் ஒன்றாகும். அவற்றில் ஒன்றைக் கூட புகைப்படம் பிடிப்பது மிகவும் கடினம்,
குறித்த இந்தக் காட்சியில் நான்கு பனிச்சிறுத்தைகள் காணப்படுகின்றன. அதில் ஒரு தாய் மற்றும் அதன் மூன்று குட்டிகள் என்றவாறாகக் காணப்படுகின்றன.
பனிச்சிறுத்தைகள் தற்போது சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியத்தின் (IUCN) அச்சுறுத்தப்பட்ட உயிரினங்களின் சிவப்பு பட்டியலில் “பாதிக்கப்படக்கூடியவை” என்று பட்டியலிடப்பட்டுள்ளன.
அவை இமயமலையின் உயரமான ஆல்பைன் பகுதிகளில் மட்டுமே வாழ்கின்றன, அவற்றின் வாழ்விடம் சீனா, பூட்டான், நேபாளம், இந்தியா, பாகிஸ்தான், ரஷ்யா மற்றும் மங்கோலியா உள்ளிட்ட 12 நாடுகளில் பரவியிருந்தாலும், காண்பதற்கு மிகவும் அரிதானவை ஆகும்.
பனிச்சிறுத்தைகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து உள்ளூர் சமூகங்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளுக்கு இது பெரும் ஊக்கப்படுத்தலாக இருக்கும் என்று கருதப்படுகின்றது.
உள்ளூரில் “மலைகளின் பேய்” என்று அழைக்கப்படும் அவை, பாகிஸ்தானின் கில்கிட் பால்டிஸ்தான் பகுதியில் உள்ள கரகோரம் மலைத்தொடரின் இயற்கையான வாழ்விடங்களில் எளிதில் உருமறைப்பு செய்கின்றன என்பதால் இவற்றைப் பார்ப்பது மிகவும் கடினமாகின்றது.
தொலைதூர கிராமமான ஹுஷேவைச் சேர்ந்த விளையாட்டு வீரரும், புகைப்பட ஆர்வலருமான சகாவத் அலி, உலகின் இரண்டாவது உயரமான மலையான கே 2விற்கு அருகில், பனி மூடிய மத்திய காரகோரம் தேசிய பூங்கா வழியாக இரண்டு வாரங்களாக குறித்த கால்தடங்களைக் கண்காணித்த பிறகு மார்ச் 13 அன்று இந்தக் காட்சிகளைப் பதிவு செய்தார்.
“கிராமத்தில் நாங்கள் பனிச்சிறுத்தைகளைப் பார்ப்பது வழக்கம், ஆனால், யாரும், ஒரே நேரத்தில் நான்கு பனிச்சிறுத்தைகளை ஒன்றாகப் பார்த்ததில்லை” என்று அவர் கூறினார்.
அவர் முதலில் தாயைக் கண்டதாகவும், தொடர்ந்து ஏனைய கால்தடங்களைக் கவனிக்கத் தொடங்கியதாகவும், பின்னர், தனது வீட்டின் கூரையிலிருந்து, தொலைநோக்கி மூலம் அருகிலுள்ள பாறையில் குறித்த விலங்குகளை ஒன்றாகக் காணக்கிடைத்ததாகவும் 200 மீட்டர் தூரத்திலிருந்து அவற்றைப் படம்பிடிக்க, புகைப்படக் கருவியுடன் விரைந்து சென்றதாகவும் தனது அனுபவங்களை சகாவத் அலி பகிர்ந்துள்ளார்.
தங்கள் கால்நடைகள் ஆபத்தில் இருக்கக்கூடும் என்ற கவலைகள் இருந்தபோதிலும், தனது கிராமத்தைச் சேர்ந்த அண்டை வீட்டார் இந்த நிகழ்வைக் கொண்டாடுகிறார்கள் என்று மகிழ்ச்சியாகத் தெரிவித்தார் சகாவத் அலி.
உலக வங்கியின் உலகளாவிய காலநிலை இடர் குறியீட்டின்படி, 2023 ஆம் ஆண்டில், காலநிலை மாற்றத்தால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய 5வது நாடாக பாகிஸ்தான் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், குறித்த பனிச் சிறுத்தைகளின் புகைப்படமானது அவை பற்றிய விழிப்புணர்வுகளை வலுப்படுத்த தூண்டுதலாக அமைந்துள்ளது.
Link : https://namathulk.com