இந்திய நகரமான நாக்பூரின் சில பகுதிகளில், 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த முகலாய ஆட்சியாளரின் கல்லறையை அகற்ற வேண்டும் என்ற இந்து குழுவின் கோரிக்கையால் தூண்டப்பட்ட மோதல்களின் காரணமாக காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மத்திய இந்திய நகரத்தில் கடந்த திங்களன்று இடம்பெற்ற வன்முறை காரனமாக பல வாகனங்கள் சேதமடைந்ததுடன் மேலும் பலர் காயமடைந்தனர், நாக்பூர் நகரம் அமைந்துள்ள மேற்கு மாநிலமான மகாராஷ்டிராவின் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், சட்டம் ஒழுங்கை பராமரிக்க அனைத்து முயற்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
விஸ்வ இந்து பரிஷத்தின் குழுவின் உறுப்பினர்கள், பேரரசர் ஔவுரங்கசீப்பின் உருவ பொம்மையையும் அவரது கல்லறையையும் எரித்ததாகவும், அருகிலுள்ள நகரமான அவரங்காபாத்தில் இருந்து அதை அகற்றக் கோரி கோஷங்களை எழுப்பியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முஸ்லீம் குழுக்களைச் சேர்ந்த பல உறுப்பினர்கள் ஒரு காவல் நிலையத்திற்கு அருகே அணிவகுத்துச் சென்று போலீசார் மீது கற்களை வீசியதைத் தொடர்ந்து நிலைமை மோசமடைந்ததாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தங்கள் முகங்களை மறைத்து முகமூடிகளை அணிந்து தாக்குதல் நடத்தியவர்கள், கூர்மையான ஆயுதங்கள் மற்றும் போத்தல்களை எடுத்துச் சென்றனர் என்று அப்பகுதியில் வசிப்பவர்கள் தெரிவித்துள்ள நிலையில், எந்தவொரு வன்முறையிலும் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை விஸ்வ இந்து பரிஷத் மறுத்துள்ளது. எனினும் உள்ளூர் மராட்டிய சமூகத்தைச் சேர்ந்த ஆட்சியாளர்களுக்கான நினைவுச் சின்னத்துடன் கல்லறை மாற்றப்பட வேண்டும் என்று அது விரும்புவதாக அதன் பொதுச் செயலாளர் மிலிந்த் பரண்டே தெரிவித்துள்ளார்.
Link : https://namathulk.com