இந்தியாவில் பாபர்மசூதி எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து பேரலையைக் கிளப்பிவிட்ட அயோத்தி ராமர் கோயில் விவகாரமானது அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் என்று கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பரில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து முற்றுப்பெற்றது.
இதனைத் தொடர்ந்து கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் திகதி பிரதமர் நரேந்திர மோடி, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டியதைத் தொடர்ந்து கடந்த 2024ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் திகதி ராமர் கோயிலில் பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அயோத்தி ராமர் கோயிலானது மிக முக்கியமான மற்றும் பெருவாரியான பக்தர்களின் வழுபாட்டுத்தலமாக இயங்க ஆரம்பித்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளில் அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளை சார்பில் அரசுக்கு 400 கோடி ரூபாய்கள் வரியாகச் செலுத்தப்பட்டுள்ளது.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானம் தொடங்கியது முதல் நகரின் பொருளாதாரம் அபரிதமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 10 மடங்குக்கும் அதிகமான பக்தர்கள் அயோத்திக்கு வருகை தந்துள்ளனர். ஏராளமான புதிய வேலைவாய்ப்புகள் உருவாகி உள்ளன. மிகப்பெரிய ஆன்மிக சுற்றுலா தலமாக அயோத்தி உருவெடுத்திருக்கிறது. அயோத்தி நகரம் மட்டுமன்றி அரசுக்கும் நிறைவான வருவாய் கிடைத்திருக்கிறது என்று ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை பொதுச்செயலாளர் சம்பத் ராய் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி கோயில் நிர்வாகம் சார்பில் கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி முதல் 2025ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி வரை 400 கோடி ரூபாவை வரியாகச் செலுத்தி உள்ளதாகவும், இதில் 270 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி ஆகும். 130 கோடி ரூபாய் இதர வகை வரிகள் ஆகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஓராண்டில் மட்டும் அயோத்திக்கு 16 கோடி பக்தர்கள் வருகை தந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.
Link : https://namathulk.com