அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கிமிடையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு தொலைபேசி அழைப்பைத் தொடர்ந்து, உக்ரைனில் உடனடி மற்றும் முழு போர்நிறுத்தத்தை நிராகரித்து, எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்களை நிறுத்த மட்டுமே ரஷ்யா ஒப்புக் கொண்டுள்ளது.
அண்மையில் சவூதி அரேபியாவில் இடம்பெற்ற உக்ரனுக்கும் டிரம்ப்பின் குழுவிற்குமான ரஷ்ய- உக்ரைன் போர்நிறுத்த உடன்படிக்கை சார்ந்த சந்திப்புக்களில் எட்டப்பட்ட முடிவுகளில், ஒரு மாத கால போர்நிறுத்தத்தில் கையெழுத்திட ரஷ்ய தலைவர் மறுத்துவிட்ட நிலையில் வெளிநாட்டு இராணுவ உதவி மற்றும் உக்ரைனுடனான உளவுத்துறை பகிர்வு முடிவுக்கு வந்தால் மட்டுமே ஒரு விரிவான போர்நிறுத்தத்தில் செயற்பட முடியும் என்று அவர் தெரிவித்தார்.
ரஷ்ய தலைவருடனான தனது அழைப்பு “மிகவும் நல்லதாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது. அமைதிக்கான ஒப்பந்தத்தின் பல கூறுகள் விவாதிக்கப்பட்டன. ரஷ்யாவின் கூற்றுப்படி அனைத்து எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு மீது உடனடி போர்நிறுத்தத்திற்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம், ஒரு முழுமையான போர்நிறுத்தத்தை ஏற்படுத்தவும், இறுதியில், ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான இந்த பயங்கரமான போருக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் நாங்கள் விரைவாக செயற்படுவோம்” என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்பில் சுமார் 80% ரஷ்ய குண்டுகளால் அழிக்கப்பட்டுள்ளதாக ஜெலென்ஸ்கி கடந்த செப்டம்பர் மாதம் தெரிவித்திருந்தார். அதேபோல உக்ரைன், ரஷ்ய எல்லைக்குள் ஆழமாக, எண்ணெய் மற்றும் எரிவாயு நிலையங்கள் மீது ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களையும் நடத்தியுள்ளது.
இந்த நிலையில் டிரம்பிற்கும் புடினுக்கும் இடையிலான அழைப்பைத் தொடர்ந்து சில மணிநேரங்களில் ரஷ்யா உக்ரைனுக்கு எதிராக 40 க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவியதாக ஜெலென்ஸ்கி தெரிவித்தார். இதற்கிடையில், தெற்கு ரஷ்ய பிராந்தியமான கிராஸ்னோடரில் உள்ள அதிகாரிகள், உக்ரேனிய ட்ரோன் தாக்குதல் ஒரு எண்ணெய் கிடங்கில் சிறிய தீயை ஏற்படுத்தியதாகக் கூறியுள்ளனர்.
இந்நிலையில் குறித்த சமாதானப் பேச்சுவார்த்தை தொடர்பாக எட்டப்பட்ட முடிவுகள் கேள்விக்குறியாகியுள்ளன.
Link : https://namathulk.com