சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் சக கைதிகளால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் கொழும்பு மெகசின் சிறைச்சாலை கைதியின் மரணம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
54 வயதான ஒரு பிள்ளையின் தந்தையான இவர், மஹரகம பொலிசாரால் ஜஸ் போதைப்பொருள் கடத்தியதற்காக கைது செய்யப்பட்ட பின்னர், பெப்ரவரி 23 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் உள்ள இரண்டு அதிகாரிகள், ஜஸ் போதைப்பொருள் வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் அந்த நபரை பரிசோதிக்க முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர் ஜஸ் போதைப்பொருளை விழுங்கியதாகவும், அதன் பின்னர் இரண்டு சிறைச்சாலை அதிகாரிகளும் மற்ற இரண்டு கைதிகளும் அவரை கொடூரமாக தாக்கியதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
பலத்த காயமடைந்த கைதி சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டடு, சிகிச்சை பலனின்றி இம்மாதம் 16 ஆம் திகதி உயிரிழந்தார்.
இரண்டு சிறைச்சாலை அதிகாரிகளும் இரண்டு கைதிகளும் பாதிக்கப்பட்டவருக்கு ஜஸ் போதைப்பொருளை வாந்தி எடுக்க இரண்டு பாட்டில் உப்பு நீரை குடிக்க வைத்ததாக சிறைச்சாலையில் உள்ள ஏனைய கைதிகளிடம் பொலிசார் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
Link : https://namathulk.com