சுமார் 8 மில்லியன் பேர் ஊழியப் படையில் இருந்தபோதும், சுமார் 800,000 பேர் மட்டுமே வரி வலையின் கீழ் வருவது ஏன் என அரசாங்க நிதி பற்றிய குழு கேள்வி எழுப்பியது.
தற்போதைய முறைமையில் அண்ணளவான 8 மில்லியன் பேரில் சுமார் 800,000 பேர் மட்டுமே வரி செலுத்தும் எல்லைக்குள் தகுதிப்பெறுவதாக நிதி அமைச்சைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் மற்றும் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும ஆகியோர் தெரிவித்தனர்.
2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உண்ணாட்டரசிறை சட்டத்தை நிறுத்துவதற்கான, உண்ணாட்டரசிறை (திருத்தம்) சட்டமூலத்தைப் பரிசீலனை செய்யும் நோக்கில் அரசாங்க நிதி பற்றிய குழு பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ த சில்வா தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியது.
இதன்போது, தனிநபர் வருமான வரிக்கான விடுப்பை ஆண்டுக்கு 1,200,000 ரூபாவிலிருந்து 1,800,000 ரூபாவாக அதிகரிப்பதற்கு சட்டமூலத்தில் முன்மொழியப்படுகின்றமை கருத்திற்கொள்ளப்பட்ட போதே இந்த விடயம் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், பந்தயம் மற்றும் சூதாட்டம், மதுபானம் மற்றும் புகையிலையைக் கொண்ட வியாபாரங்களிலிருந்து வருமான வரி அறவிடுதலை 40% இலிருந்து 45% ஆக அதிகரிக்க முன்மொழியப்பட்டது.
மேலும், சேவை ஏற்றுமதி மீது 15% வருமான வரி மற்றும் வட்டி வருமானத்தின் மீதான நிறுத்திவைத்தல் வரியை 5% இலிருந்து 10% ஆக அதிகரிப்பதற்கும் தீர்மானிக்கப்படடது.
உழைக்கும் போது செலுத்தும் வரி தரவுகளின் பகுப்பாய்வை ஆழமாகக் கருத்திற்கொண்ட நிதி பற்றிய குழு, தற்போதைய தரவுகளில் பிழை இருப்பதாக முடிவு செய்தது.
அதற்கமைய, துல்லியமான தரவுப் பகுப்பாய்வை குழுவுக்கு சமர்ப்பிக்குமாறு குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.
அத்துடன், வரி செலுத்துதல், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்தல் அல்லது உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திலிருந்து ஏதேனும் சேவைகளைப் பெறுவதற்கு அவசியமான வரி அடையாள இலக்கம் பெறும் செயன்முறை செயலில் இல்லை என்பதும் அரசாங்க நிதி பற்றிய குழுவில் வெளிப்பட்டது.
அதேவேளை, சூதாட்ட ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையை ஸ்தாபிப்பதற்கு அமைச்சு தவறியமை குறித்து தனது அதிருப்தியை குழு வெளிப்படுத்தியது.
மேலும், கடந்த 5 ஆண்டுகளில் சூதாட்ட செயற்பாடுகளிலிருந்து பெறப்பட்ட வருமானம், குறித்து குழுவால் முன்னர் கோரப்பட்ட உரிய தரவுகளை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வழங்கத் தவறியமை தொடர்பிலும் குழுவின் தலைவர் தனது அதிருப்தியை தெரிவித்தார்.
Link : https://namathulk.com