உள்ளூராட்சிமன்ற தேர்தலில் போட்டியிட தகுதிபெற்றுள்ள வேட்பாளர்களின் பெயர் பட்டியல் ஒரு வாரத்திற்குள் வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளது.
அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்கும் காலம் நேற்று நண்பகலுடன் நிறைவடைந்தது.
இந்நிலையில் இம்முறை உள்ளூராட்சிமன்றங்களின் அதிகாரங்களை கைப்பற்றும் நோக்குடன் களமிறங்கிய சில முக்கிய நபர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சபைகளில் போட்டியிடும் எதிர்பார்ப்பில் களமிறங்கிய பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் சுயேட்சை குழுவின் அனைத்து வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.
நேற்று மாலை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது , யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம. பிரதீபன் இந்த விடயத்தை உறுதிப்படுத்தினார்.
இதேவேளை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கலேவல பகுதியில் போட்டியிடும் இலங்கை குடியுரிமை பெற்ற ஜெர்மன் பெண்ணின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது .
மாத்தளை கலேவல பிரதேச சபைக்கு போட்டியிடுவதற்காக அவர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.
வெளிநாட்டு வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும்
அடிமட்டத்திலிருந்து மாற்றங்களைக் கொண்டுவருவதற்காக தாம் போட்டியிட நினைத்ததாக அவர் கூறியுள்ளார்.
Link : https://namathulk.com