சம்பூர், மன்னார் மற்றும் சியம்பலாண்டுவ மின்னுற்பத்தி நிலையங்களை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக தெரிவித்துள்ளார்.
சம்பூர் மின்சார நிலையத்தை நிர்மாணிக்கும் பணிகளை ஆரம்பிக்க ஏப்ரல் 05 ஆம் திகதி இந்திய பிரதமர் நரேந்திர மோடி வருகையுடன் ஆரம்பித்து வைக்க எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
இந்த பின்புலத்தில் நாட்டின் ஸ்திரத்தன்மையை அடைவதற்கான சமிக்ஞையை காண்பித்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல சியம்பலாண்டுவ பகுதியில் புதிய சூரிய சக்தி மின்னுற்பத்தி நிலையத்தையும், மன்னாரில் 50 மெகாவோட் காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தையும் ஆரம்பிக்க உள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
மூன்று வருடங்களுக்கு பின்னர் கடந்த நான்கு மாதங்களாக டொலருக்கு நிகராக ரூபாவின் பெறுமதியை ஸ்திரமான தன்மையுடன் பேணுவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை வேலையற்ற பட்டதாரிகளுக்கான தொழில்வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் 15300 வெற்றிடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், 15300 பேரை அரச சேவையில் இணைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
Link: https://namathulk.com