புதிய தொழில் ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட நதீகா வட்டலியத்த இன்று காலை நாராஹேன்பிட்ட – மெஹேவர பியெஸ கட்டிடத்தில் அமைந்துள்ள தொழில் திணைக்களத்தில் பதவியேற்றார்.
கங்கசிறிபுர கனிஷ்ட வித்தியாலயம், கம்பொல புனித ஜோசப் மகளிர் கல்லூரி மற்றும் கண்டி மகாமாயா மகளிர் கல்லூரி ஆகியவற்றின் சிறந்த பழைய மாணவியான அவர், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் புவியியல் துறையில் கௌரவப் பட்டம் பெற்றவர்.
மேலும், கொழும்புப் பல்கலைக்கழகத்தில் தொழில் ஆய்வுகள், அவுஸ்திரேலியாவின் Flinders பல்கலைக்கழகத்தில் மகளிர் ஆய்வுகள் மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் South wales பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகம் ஆகியவற்றில் முதுகலைமாணிப் பட்டங்களைப் பெற்றுள்ளார்.
2001 ஆம் ஆண்டு தொழில் அதிகாரியாக அரச சேவையில் இணைந்த நதீகா வட்டலியத்த, 2003 ஆம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவையில் இணைந்தார்.
அவர் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் பிரதி ஆணையாளராகவும், தேசிய தொழில் ஆய்வு நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகமாகவும், இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகமாகவும், கல்வி அமைச்சின் மேலதிக செயலாளராகவும், பல அரச நிறுவனங்களில் பல்வேறு பதவிகளையும் வகித்துள்ளார்.
நதீகா வட்டலியத்த தொழில் திணைக்கள வரலாற்றில் தொழில் ஆணையாளர் நாயகப் பதவிக்கு நியமிக்கப்பட்ட மூன்றாவது பெண்மணி ஆவார்.
Link : https://namathulk.com