இலங்கை – சீன பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவர் பதவிக்கு அமைச்சர் பிமல் ரத்னாயக்க தெரிவு.

Ramya
By
2 Min Read
பிமல் ரத்னாயக்க

பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – சீன நட்புறுவு சங்கத்தின் தலைவர் பதவிக்கு சபை முதல்வரும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சருமான பிமல் ரத்னாயக்க தெரிவுசெய்யப்பட்டார்.

இலங்கை – சீன பாராளுமன்ற நட்புறவு சங்கத்தை மீள ஸ்தாபிப்பதற்கான கூட்டம் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.

இதன்போது, இலங்கை – சீன பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் செயலாளராக பாராளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திர தெரிவுசெய்யப்பட்டார்.

இதன்போது, இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் நீண்டகாலமாகக் காணப்படும் இரு தரப்பு கலாசார மற்றும் அரசியல் உறவுகளை சபாநாயகர் நினைவுகூர்ந்தார்.

அத்துடன், இந்த உறவுகளை மேம்படுத்துவதற்குப் பாராளுமன்ற நட்புறவு சங்கம் முக்கியமான தளமாக அமையும் எனவும் சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.

இரு தரப்பினருக்கும் அதிகபட்ச நன்மைகளைப் பெறுவதற்காக பொருளாதாரம், வர்த்தகம், கல்வி மற்றும் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த நெருக்கமாக பணியாற்றுவதன் முக்கியத்தை வலியுறுத்திய சபாநாயகர், நட்புறவு சங்கத்தில் புதிய பொறுப்புக்களைப் பெற்றுக்கொண்டவர்கள் இதற்காகப் பணியாற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார்.

நட்புறவு சங்கத்தின் ஊடாக இரண்டு நாடுகளும் பரஸ்பரம் அக்கறை செலுத்தும் துறைகளை வலுப்படுத்துவதன் அவசியத்தை இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் வலியுறுத்தினார்.

மேலும், இலங்கையும் சீனாவும் தங்கள் கடினமான காலங்களில் மிகவும் நட்புடன் இணைந்து பணியாற்றியுள்ளன என்பதை நினைவு கூர்ந்த தூதுவர், சீன-இலங்கை நட்புறவு சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

இலங்கை – சீன நட்புறவு சங்கத்தின் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்ட சபை முதல்வரும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சருமான பிமல் ரத்னாயக்க கருத்துத் தெரிவிக்கையில், கல்வி மற்றும் வணிகக் கைத்தொழில் போன்ற துறைகளில் சீனாவிடம் காணப்படும் திறன் மற்றும் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

இரு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் நீண்டகால உறவை மேலும் பலப்படுத்தும் வகையில் இந்தப் பாராளுமன்ற நட்புறவு சங்கம் செயற்படும் என அதன் செயலாளராகத் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திர தெரிவித்தார்.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *