201 முதல் 450 வரையான இயந்திர வலுப் பிரிவின் கீழ் அறவிடப்பட வேண்டிய உரிய தொகையை அறவிடாது 296 மோட்டார் சைக்கிள்களைப் பதிவுசெய்தமையின் காரணமாக அரசாங்கத்திற்கு 78.15 இழப்பு ஏற்பட்டிருப்பதாக கோப் குழவில் தெரியவந்துள்ளது.
மோட்டார் வாகனத் திணைக்களத்தின் 2020, 2021, 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை குறித்து கலந்துரையாடுவதற்காக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் தலைமையில் கூடியது.
இதன்போது, அமைச்சரவை அனுமதி இன்றியும், பதிவு செய்வதற்குத் தேவையான சட்டரீதியான ஆவணங்கள் இன்றியும் 3,088 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக கோப் குழவில் தெரியவந்ததது.
இது பற்றி விசாரிப்பதற்காக கடந்த 10ஆம் திகதி மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் கோப் குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தபோதும், அதிகாரிகள் உரிய தயார்ப்படுத்தலில் வராமையினால் அவர்கள் திருப்பியனுப்பப்பட்டிருந்தனர்.
அத்துடன், அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் 2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கோப் உபகுழுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட பரிந்துரைகள் குறித்தும் இங்கு ஆராயப்பட்டது.
சுங்கத்தின் கணினிக் கட்டமைப்பில் இணைவதற்கு முன்னர், இடம்பெறும் ஏனைய அனைத்து வாகனப் பதிவுகள் குறித்தும் கணக்காய்வாளர் நாயகத்தினால் முன்வைக்கப்பட்ட 25 விடயங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
அதேவேளை, அந்த நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான அதிகாரிகளுக்கு எதிராக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் எடுத்துள்ள ஒழுக்காற்று நடவடிக்கைகள் உள்ளிட்ட தற்போதைய செயலாற்றுகை குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக திணைக்களம் எவ்வித ஒழுக்காற்று நடவடிக்கையையும் எடுக்காமை தொடர்பில் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்திய குழு, திணைக்களத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கை தொடர்பில் திருப்தியடைய முடியாது என்றும் வலியுறுத்தியது.
இதற்கு அமைய குறித்த விடயம் தொடர்பில் காலதாமதம் இன்றி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், இதற்கான விசாரணைகளை சுயாதீனமான அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கோப் குழுவின் தலைவர் அறிவுறுத்தல் வழங்கினார்.
முன்னர் பதிவுசெய்யப்பட்ட வாகனங்களின் இலக்கங்களின் கீழ் பதிவுசெய்யப்பட்ட அடிச்சட்ட இலக்கங்கள் மற்றும் இயந்திர இலக்கங்களை பதிவுக் கட்டமைப்பிலிருந்து மாற்றி மோசடியான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களுக்கு அவற்றை வழங்கி, சட்டவிரோதமான முறையில் மோட்டார் வாகனப் பதிவுச் சான்றிதழ் வெளியிட்டமை குறித்தும் கோப் குழு கவனம் செலுத்தியது.
இதனால், அரசாங்கத்திற்கு 1.2 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகவும் இங்கு தெரியவந்தது.
மேலும், பயன்பாட்டிற்கு எடுக்கப்படாத வெற்று இலக்கங்களை மோசடியாகப் பயன்படுத்தி மோட்டார் வாகனப் பதிவுச் சான்றிதழ்கள் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினால் வழங்கப்பட்டமையால் அரசாங்கத்திற்கு 6.2 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளது.
அத்துடன், வெளிநாட்டு இராஜதந்திர வாகன இலக்கங்கள் வேறு வாகனங்களின் பதிவுகளுக்காகப் பயன்படுத்தியமையால் அரசாங்கத்திற்கு 122 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதோடு, இது குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் கணக்காய்வாளர் நாயகம் வலியுறுத்தினார்.
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் விசாரணைகளை நடத்தி அவற்றுடன் தொடர்புபட்ட சகல அதிகாரிகளுக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், இதில் ஏற்படும் முன்னேற்றம் தொடர்பில் விசாரிக்க திணைக்களத்தை மாதம் தோறும் குழு முன்நிலையில் அழைப்பதற்கும் இங்கு பரிந்துரைக்கப்பட்டது.
மேலும், இங்கு இடம்பெற்றுள்ள மோசடியான செயற்பாடுகள் தொடர்பில் சட்டத்தை நிலைநாட்டும் நிறுவனங்கள் ஊடாக நடவடிக்கை எடுக்குமாறும் குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியது.
Link : https://namathulk.com