பிரித்தானியா விதித்துள்ள தடைக்கு சிறீதரன் வரவேற்பு!

Ramya
By
1 Min Read
சிறீதரன்

உள்நாட்டுப் போரின் போது ஏற்பட்ட கடுமையான மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பானவர்கள் எனக் கூறப்படும் நால்வர் மீது பிரித்தானியா விதித்துள்ள தடையானது தமிழர்களின் நீதிக்கான தேடலில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இந்த தடையை வரவேற்று இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரகத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இலங்கை தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கடிதத்தில், எதிர்வரும் செப்டெம்பரில் நடைபெறவுள்ள ஜெனீவா அமர்வுகளுக்கு முன்னதாக, இனப்படுகொலையின் பங்குதாரர்களான நால்வர் மீது பிரித்தானிய அரசு விதித்துள்ள பயணத்தடை, காலம் தாழ்த்தியாவது தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை மீள அரும்பச் செய்திருக்கிறது.

இலங்கையில், குறிப்பாக வடக்கு, கிழக்கு தமிழர்கள் மீது பேரினவாத அரசு வலிந்து நடாத்திய போரின்போது மோசமான மனித உரிமை மீறல்கள், நீதிக்குப் புறம்பான கொலைகள், சித்திரவதைகள், பாலியல் வன்முறைகளில் ஈடுபட்ட இந்த நான்கு பேர் மீதும் பிரித்தானிய அரசு விதித்திருக்கும் தடையையும், சொத்து முடக்க அறிவிப்பையும், சர்வதேச நீதிகோரும் பயணத்தில் தமக்கு கிடைத்திருக்கும் ஒரு சிறிய நம்பிக்கை ஒளிக்கீற்றாகவே ஈழத்தமிழர்கள் பார்க்கிறார்கள்.

என்பது வருடங்களுக்கு மேலாக கேட்பாரற்று படுகொலை செய்யப்பட்ட தமிழ்த்தேசிய இனத்தின் எண்ணங்களுக்கும் இறந்துபோன ஆத்மாக்களுக்கும் இந்தத் தடை அறிவிப்பு தமக்கான நீதியின் கதவு திறக்கும் என்ற நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது.

காலனித்துவ ஆட்சி முடிவில், சுதேசிகளான தமிழர்களின் இறைமையைப் பிறிதோர் இனத்தவரிடம் ஒப்படைத்துச் சென்றமை வரலாற்றுத் தவறு என்பது இப்போதாவது உணரப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

Link: https://namathulk.com/

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *