இந்தியாவிலிருந்து வருகை தந்த மீனவ தூதுக்குழு தெற்கை தளமாக கொண்டு இயங்கும் மீனவ குழுவுடன் பேசி இலங்கை இந்தியா மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு எட்ட முடியாது என யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கிராமிய அமைப்புகளின் தலைவர் செல்லத்துரை நற்குணம் தெரிவித்தார்.
யாழ் மாவட்ட கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை கூறினார்.
இதன்போது, இலங்கை இந்தியா மீனவர் பிரச்சனை தொடர்பில் பேசுவதற்காக இந்தியாவிலிருந்து வருகை தந்த குழுவினர், கடற்தொழில் இல்லாத மாவட்டத்தில் இலங்கை மீனவ சங்கப் பிரதிநிதிகள் என கூறிக் கொள்ளும் தென் இலங்கையைச் சேர்ந்த ஒரு அமைப்பின் அங்கத்தவர்களை வவுனியாவில் சந்தித்ததாக கிராமிய அமைப்புக்களின் தலைவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், மீனவர்கள் பிரச்சனை தொடர்பில் கலந்துரையாடுவதற்கு, சங்கங்கள், சமாசங்கள், சம்மேளனங்கள் மற்றும், கிராமிய அமைப்புகள் உள்ளதாகவும், இவற்றையும் தாண்டி, உத்தியோகப்பூர்வமாக நீர்வள திணைக்கள அமைச்சு உள்ளதாகவும் கிராமிய அமைப்புக்களின் தலைவர் கூறினார்.
இவர்களோடு கலந்துரையாடாமல் தெற்கு அமைப்பில் அங்கம் வகிக்கும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிலரை அங்கத்தவர்கள் எனக்கூறி அவர்களுடன் கலந்துரையாடி மீனவ சமூகத்தின் பிரச்சனையை தீர்க்க முடியாது என கிராமிய அமைப்புக்களின் தலைவர் கூறினார்
பதிவு செய்யப்படாத அமைப்புக்களுடன் இந்திய மீனவக் குழுக்கள் கலந்துரையாடி தீர்மானம் எடுக்குமாயின், அத்தீர்மானம் மீனவ சமூகம் சார்ந்ததாக அமையாது எனவும் கிராமிய அமைப்புக்களின் தலைவர் சுட்டிக்காட்டினார்.
Link : https://namathulk.com