கொழும்பில் உள்ள வெலிக்கடை மற்றும் மெகசின் சிறைச்சாலைகளின் தற்போதைய நிலைமையை ஆராய்வதற்கான கண்காணிப்பு சுற்றுப்பயணத்தில் நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார இன்று காலை பங்கேற்றார்.
கண்காணிப்பு சுற்றுப்பயணத்தைத் தொடர்ந்து சிறை அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் போது, சிறைச்சாலைகளில் கைதிகளின் கூட்ட நெரிசலைக் குறைத்தல், சிறை அதிகாரிகளின் பாதுகாப்பு மற்றும் கைதிகள் மற்றும் அதிகாரிகளின் நலன் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், கைதிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் மறுவாழ்வு முயற்சிகள் குறித்து இதன்போது விவாதிக்கப்பட்டது.
சிறை அதிகாரிகளின் உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருப்பது குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாக அமைச்சர் கூறினார்.
களுத்துறை, காலி, பூசா மற்றும் மாத்தறை சிறைச்சாலைகளில் பணிபுரியும் அதிகாரிகளின் உயிருக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் மற்றும் அவர்கள் தங்கள் கடமைகளைச் செய்யும்போது எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் வலியுறத்தினார்.
மேலும், மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் கைதிகளின் நன்னடத்தை, அவர்கள் தண்டனை அனுபவித்த காலம் மற்றும் அவர்களின் மறுவாழ்வு காலம் ஆகியவற்றை ஆராய்ந்து, தற்போதைய சட்ட முறைக்கு ஏற்ப, அமைச்சுக்கள் மட்டத்தில் தண்டனை குறைப்புக்கான நான்கு ஆண்டு மறுஆய்வு முறையை மீண்டும் அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அதேவேளை, கைதிகள் ஈடுபட்டுள்ள தச்சு வேலை, பேக்கரி, தையல், புத்தகப் பிணைப்பு மற்றும் துணிகளை சுத்தம் செய்தல் உள்ளிட்ட தொழில்களையும் அமைச்சர் பார்வையிட்டார்.
Link : https://namathulk.com