அரச பல்கலைக்கழகங்களில் கல்விகற்ற மாணவர்களை அரச சேவையில் இணைப்பதற்கு மீண்டும் போது அறிவு பரீட்சை நடாத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் நேற்று போராட்டம் வலுப்பெற்றது.
இணை சுகாதார விஞ்ஞான பட்டதாரிகள் ஒன்றியத்துடன் இணைந்து அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் சுகாதார அமைச்சிற்கு முன்பாக இந்த போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது நீதிமன்ற உத்தரவை மீறியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் உள்ளிட்ட 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இணை சுகாதார பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக் கொள்ளும் செயற்பாட்டை மட்டுப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இணை சுகாதார விஞ்ஞான பட்டதாரிகள் ஒன்றியம் நேற்று முதல் கொழும்பில் சத்தியாகிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.
மருதானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வைத்தியசாலை சதுக்கம், சுகாதார அமைச்சிற்கு உட்பிரவேசிக்கும் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் உள்ள வீதிகளை மறிக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடாத்த மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் தடை விதித்திருந்தது.
அந்த தடை இன்று மாலை வரை அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Link: https://namathulk.com