விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த 27 டன் யூரியா உரம், இலங்கைக்கு கடத்துவதற்காக களஞ்சியசாலை ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டமை தொடர்பான வழக்கை தமிழக புலனாய்வு துறையினர் விசாரணை செய்ய வேண்டும் எனக்கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பில் பொலிசார் விளக்கமளிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த எஸ்.சரவணன் என்பவரால் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கோவில்பட்டி திட்டகுளம் சிட்கோ களஞ்சியசாலையில் கடந்த ஜனவரி மாதம் 20 திகதி கைப்பற்றப்பட்ட 27 டன் யூரியா உர மூடைகள் தொடர்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வேளாண் கூட்டுறவு மற்றும் கடன் சங்கங்களில் இருந்து விவசாயிகளுக்கு மானிய விலைக்கு வழங்க வேண்டிய உரங்களை மூன்றாம் நபர்கள் டன் கணக்கில் கொள்வனவு செய்து இலங்கைக்கு கடத்தியுள்ளனர் என மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்திய மத்திய அரசு உரத்தை அத்தியவாசிய பொருட்கள் பட்டியலில் வைத்துள்ளது.
இதனால் யூரியா உரம் பதிக்கியவர்கள் மீது அத்தியவாசிய பொருட்கள் பதுக்கல் தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும்.
அவ்வாறு வழக்கு பதிவு செய்யாது சாதாரண பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே பொலிசார் இந்த விடயம் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ள மாட்டார்கள் எனவும், அதனை குற்றப்புலனாய்வு துறையினர் முன்னெடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
பின்னர் நீதிபதிகள் மனு தொடர்பாக உள்துறை செயலாளர், டிஜிபி, தூத்துக்குடி எஸ்பி, கோவில்பட்டி காவல் ஆய்வாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 9 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தனர்.
Link: https://namathulk.com